அணு உலைக்கு எதிரான உண்ணாநோன்பு கைவிடப்பட்டது

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக கால வரையற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்த 15 பேரும் தமது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 3 பெண்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மத்திய அரசுக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து உண்ணாநோன்புப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அந்தப் பகுதியில் நாளை முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டம் நடைபெறும் என்று செயற்பாட்டாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஒன்பது நாளாக அங்கு நடைபெற்றுவந்த உண்ணாநோன்புப் போராட்டம் காரணமாக அங்கே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் உதவியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த உலைகளின் பாதுகாப்பு குறித்து செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் கூடங்குளம் அணு மின் உலையில் இருந்து வெளியாகும் கழிவுகள் எப்படிக் கையாளப்படும், விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை யார் கொடுப்பது போன்ற விடயங்கள் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். அதே நேரம் இந்த உலை மிகவும் நவீனமானது என்றும் பாதுகாப்பானது என்றும் இந்திய அரச அணு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

-BBC