ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானி அறையில் பாம்பு புகுந்ததால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று, வடக்கு பகுதியில் உள்ள பெப்பிமெனார்டி நோக்கி பறந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென, விமான கட்டுப்பாட்டு கருவிகள் உள்ள இடத்தில் பாம்பு ஒன்று வெளிவந்தது. இதனால், பயந்து போன விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாகப் புறப்பட்ட இடத்துக்கே திரும்பும் படி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறினர்.
அதற்குள், அந்த பாம்பு கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் விசையின் மீது அமர்ந்து கொண்டதால் விமானியால் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவர் டார்வின் விமான நிலையத்துக்கே, விமானத்தை திருப்பிச் செலுத்தி தரையிறக்கினார்.
அதற்குள், விமான நிலையத்தில் பாம்பாட்டி சகிதமாக அதிகாரிகள் காத்திருந்தனர். விமானத்தில் இருந்து விமானி வெளியே வந்ததும், பாம்பாட்டி பாம்பைத் தேடினார் கிடைக்கவில்லை. பாம்பு நிபுணர்களும் விமானத்துக்குள் சென்று பாம்பை தேடிப் பார்த்தனர் பாம்பு அகப்படவில்லை. இதையடுத்து, ஒரு பொறியில் எலியை வைத்து பாம்பை பிடிக்க காத்திருக்கின்றனர். அதுவரை விமானத்தை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.