இலங்கைக்கு செல்லவுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலிருந்து தனது உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக அதிமுக-வின் பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இம்மாதம் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் அந்தக் குழுவினருக்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறல்களை கேட்டறியவும் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளதால், தமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பயணத்தின் போது இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது எனவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிராயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப்பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமான ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும்தான் தெரிகிறது எனவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை செல்லும் குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாததும் தமது ஐயத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் அவரது அறிக்கை கூறுகிறது.
இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் தான் நம்பியதாவும், ஆனால் நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் தமது கட்சியின் உறுப்பினரை விலக்கிக்கொள்வதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.