தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம்!

தமிழகத்தின் புதுச்சேரியில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து, ஒரே இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் நோணாங்குப்பம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

நோணாங்குப்பம் புதுக்காலனி, 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் லிங்குசாமி,(வயது 28) டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணகி (வயது 20) என்பவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மனமுடைந்த காதலர்கள், நேற்று முன்தினம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த காதல் ஜோடிகளின் நண்பர்கள், உறவினர்கள், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும்படி, இரு வீட்டாரிடமும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, கண்ணகியின் உடல் லிங்குசாமியின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின், இருவரின் சடலங்களையும் ஒன்றாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, நோணாங்குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மேற்கொள்ளப்பட்ட திருமணச் சடங்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.