சுனாமி எச்சரிக்கை கருவி திருட்டு: இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

இந்தியப் பெருங்கடல் பகுதியில், சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்த, மிதவைக் கருவியை திருடியதாக, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2004ல் டிசம்பரில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி தாக்கியதில், தமிழகம் மட்டுமின்றி, இலங்கையிலும் பேரழிவு ஏற்பட்டது.

இதில், 31 ஆயிரம் பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து, இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதியில், சுனாமி குறித்து தெரிவிக்கும் எச்சரிக்கை கருவி, இந்தியா தரப்பில் நிறுவப்பட்டது. கடலில் மிதக்கும் இந்தக் கருவி, வழக்கத்திற்கு மாறாக எழும் உயரமான அலைகள் பற்றியும், சுனாமியை ஏற்படுத்தும் பேரலைகள் குறித்தும் முன்னரே தெரியப்படுத்தும். இந்நிலையில், இந்தக் கருவி காணாமல் போய்விட்டதாக இந்தியா தரப்பில், இலங்கையிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக, இலங்கை போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:சுனாமி எச்சரிக்கையை தெரிவிக்கும் கருவியை திருடியதாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு, அது குறித்த விழிப்புணர்வு இல்லை. தங்கள் வசம் கிடைத்த பொருளை விற்று காசாக்கவே நினைத்தனர். அதுவும் முடியாமல் போகவே, அந்தக் கருவியை கடலில் வீசிவிட்டனர்.

கடந்த மார்ச் 27ல், கேட்பாரற்று கிடந்த கருவியைக் கைப்பற்றினோம்.இவ்வாறு அஜித் ரோஹனா கூறினார். கடந்த வாரம், இந்தோனேசியாவில், மீண்டும் ரிக்டர் அளவில் 8.5 என, நிலநடுக்கம் பதிவாகியிருந்தாலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.