மிடுக்கான மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தமிழர் மனதை குளிரவைக்கின்றது!

தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறி பிரதமர் அவர்கள் நாட்டை வலம் வந்துகொண்டிருக்கிறார். சிலாங்கூர் அரசாங்கமோ கல்லூரியைப் போல் காட்சி-யளிக்கும் ஒரு கம்பீரமான தமிழ்ப்பள்ளியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. (காணொளியை பார்வைியிட அழுத்தவும்)

ஆம்! முன்னாள் மிட்லெண்ட்ஸ் தோட்டப் பள்ளிக்கு இப்போது மாற்று வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது! மலேசிய மண்ணில் மாநாட்டு மண்டபத்துடன் கூடிய ஒரே தமிழ்ப் பள்ளி இதுவேயாகும்.

கடந்த 15-ஆம் நாள் சிலாங்கூர் மந்திரி புசார் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். மாநில அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஏன் இந்திய சமூகமே பெருமைப்படக்கூடிய விசயம் இது. முன்னதாக இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென சிலாங்கூர் மாநில கல்வி இலாக்கா சில தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்தது.எனினும் அது செல்லுபடியாகவில்லை. மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்தியர்களின் அழுகுரலுக்கு ஏக்கம் மிகுந்த எதிர்பார்ப்புக்கும் செவிசாய்க்காத அம்னோவுக்கு இதுவோர் அக்னிப் பரீட்சையே!

புதிய பள்ளிக் கட்டிடத்தை உருவாக்குவதற்கு மாநில அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டது. பள்ளி நிர்வாகம் 1.7 மில்லியன் ரிங்கிட்டை திரட்டியது. இதனையே கூட்டரசு அரசாங்கம் மேற்கொண்டிருந்தால், செலவு 10 மில்லியன் என கணக்கு காட்டியிருக்கும். தமிழ்ப் பள்ளிக் கட்டிடங்களை மறுசீரமைப்பதற்கு  அரசாங்கம் 440 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளதாக பிரதமர் கூறி வருகிறார். இதில் எத்தனை விழுக்காடு அம்னோ சொந்த பந்த குத்தகையளர்களுக்குச் செல்லுமோ, எவ்வளவு பெரிய தொகை மீண்டும் அரசாங்க அதிகாரிகளுக்கே வளைந்து செல்லுமோ யார் அறிவார்?

தமிழ்ப்பள்ளிக் கட்டுமானத்துக்கென செலவிடப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிட்ட தொகையை அறிவிக்கின்றது. எனினும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மதிப்பு மூன்றில் ஒரு விழுக்காடு மட்டுமே என அறியப்படுகிறது. அதுமட்டுமன்றி கட்டுமான வேலைகள் அம்னோ குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படுகிறது என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன!

மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணியை முறியடிப்பதற்கும் திசைதிருப்புவதற்கும் முயன்ற உள்ளூர் ம.இ.கா. தலைவர்கள் இப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்? நலிவடைந்த பழைய பள்ளிக் கட்டிடத்தின் அருகிலேயே 3 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டிடம் அமைந்துள்ளது. பழைய கட்டிடம் அகற்றப்பட்டப் பின் அவ்விடத்தில் புதிய திடல் உருவானதும் மலேசியாவிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளியாக மிட்லெண்ட்ஸ் பள்ளி திகழும்!

அம்னோ இராஜ்யத்தின் கீழ் இத்தகையதொரு நேர்த்தியான தமிழ்ப்பாடசாலை உருவாகியிருக்க முடியாது என்பதை பாரிசானில் உள்ள இந்தியத் தலைவர்கள் இதுகாறும் சிந்தித்துப் பார்த்திருப்பார்கள். ஆகவே அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்திய சமூதாயத்தின் மேன்மைக்கு அனைவரும் பாடுபடு வோம்.

இந்தியரின் வளர்ச்சியில் உண்மை கரிசனம் கொண்ட தளபதிகளோ விசுவாசமான வீரர்களோ பாரிசானில் கிடையாது.பிரதமர் அறிவிக்கும் உதவிகள் யாவும் தேர்தல் அன்பளிப்புகள் மட்டுமே. கொள்கை மாற்றம் ஏதுமில்லை. இந்திய சமூகத்தின் மீது பட்சாதாபம் கொண்ட இந்தியத் தலைவர்கள் அனைவரும் அம்னோவின் மீது நம்பிக்கை இழந்து வெளியேறிவிட்டார்கள்.

சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து மறுமலர்ச்சிக்குத் தங்களை தயார் படுத்திக்கொள்ளும் தருணம் மலேசிய இந்தியர்களுக்கு வந்துவிட்டது. 2008-ஆம் ஆண்டுக்குப் பின் மலேசிய அரசியல் மாறிவிட்டது. இந்தியர்களின் அக்கால சேவை, அர்ப்பணிப்பு, தியாகம், உழைப்பு எல்லாம் மறந்துபோய்விட்டன, மறைக் கப்பட்டுவிட்டன.

மின்னல் எப்.எம் மற்றும் இதர அரசாங்கத் தகவல் சாதனங்களும் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. யார் நண்பன் யார் வைரி என்பதை இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் மாற்றங்களை சமூகம்  அறிந்துகொள்ள முடியாதப்படி பல தடைகள் வைக்கப்பட்டுள்ளன.  ஏழ்மை நிலை இந்தியர்களும், கிராமப்புற இந்தியக் குடிவாசிகளும், புறம் போக்குப் பகுதிகளில் வாழும் தங்கள் சகாக்களுடன் ஒன்றிணைந்து அரசியலில் ஓர் எழுச்சியை  ஏற்படுத்த வேண்டும். நாம் மாற வேண்டும். நம் சமுதாயம் மாற வேண்டும். இப்போது இல்லையெனில் இனி எப்போதும் இல்லை!

– செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்