கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி மூலம் இந்தியாவுக்கு பெருமை கிடைப்பதுடன், பல நாடுகளும் கண்டு மிரளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றிகரமான சோதனையை விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். நேற்று இரவு 8.30 மணியளவில் அக்னி ஏவுகணை சோதித்துப்பார்க்கப்படுவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த சோதனை இன்று காலை நடத்தப்பட்டது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்; இது போன்ற ஏவுகணைகளை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகள் மட்டுமே சோதனை செய்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றியடைவது மூலம் இந்தியாவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம்பெறுகிறது. 17 மீ., உயரமும், 50 டன் எடையும் உள்ள அக்னி 5 ஏவுகணை, ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும், பயணிகள் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை உடையது.
மேலும் இந்த ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணுஆயுதங்களை கொண்டு செல்லும் திறனுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.