கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா?

வழக்கத்திற்கு மாறாக, முட்டைக்குப் பதிலாக, கோழி, குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது. உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல், பல்வேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது, “கோழி முதலா அல்லது முட்டை முதலா’ என்பது தான். பொதுவாக, முட்டையிட்டதும், கோழி அதன் மீதமர்ந்து அடை காக்கும். கோழியின் உடல் வெப்பத்தால் முட்டையில் இருந்து சில நாட்களுக்குப் பின், கோழிக் குஞ்சு வெளிவரும். இது தான் வழக்கம். ஆனால், இலங்கையில் கோழியொன்று, முட்டையிடாமல் நேரடியாக குஞ்சை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து, கொழும்புவில் உள்ள கால்நடை மருத்துவர் பி.ஆர்.யாப்பா என்பவர் கூறுகையில், “இந்த கோழியின் கருப்பையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, கோழியின் வயிற்றிலேயே முட்டை தங்கிவிட்டது. கோழிக்குள்ளேயே இருந்த முட்டையிலிருந்து 21 நாட்கள் கழித்து குஞ்சு வெளிவந்துள்ளது. குஞ்சை பிரசவித்த கோழி அடுத்த சில நிமிடங்களில் இறந்து விட்டது. கோழி இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், உள்காயங்கள் காரணமாகத் தான் கோழி இறக்க நேரிட்டது என்பது தெரியவந்தது.