கருணாநிதி கண் முன்னே தி.மு.க. உடையும்: நாஞ்சில் சம்பத் சொல்கிறார்!

தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல தடவை பல கட்சிகளை உடைத்து இருக்கிறார். கட்சியை உடைப்பதில் கருணாநிதிக்கு நிகர் வேறு எவரும் இல்லை என  ம.தி.மு.க. மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

மதுரை மகபூப்பாளையத்தில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசும்போது அதனை அவர் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லை பெரியாறு அணை பிரச்னைக்காக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து கூடலூருக்கு நடைபயணம் மேற்கொண்டபோது ம.தி.மு.க.வை உடைக்கப் பார்த்தார். உலகத்திலேயே ஒரு கட்சியின் அவைத் தலைவரை அடுத்த கட்சிக்கு இழுத்த ஒரே தலைவர் கருணாநிதிதான். அடுத்தவருக்கு செய்த வினை ஒருநாள் தனக்கும் வரும். இன்று கருணாநிதியின் கண் முன்னே அவரது கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வை இனி யாராலும் காப்பாற்ற முடியாது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வளர்ச்சி அல்ல. அது வீக்கம். கடந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க. எவ்வாறு ஜனநாயக படுகொலை செய்ததோ அதையையே சங்கரன்கோவிலில் அ.தி. மு.க. செய்தது. இந்த ஆட்சியில் தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. யாராலும் தட்டிக்கேட்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கும் ஒரு முடிவு வரும் என அவர் பேசினார்.