போர் காலம் முடிந்து விட்டது இந்தியாவுடன் இனி பேச்சு மூலமே தீர்வு: பாகிஸ்தான்

போர் காலம் முடிந்து விட்டது. காஷ்மீர் பிரச்னை, தீவிரவாதம் உள்பட எல்லாவற்றுக்கும் இந்தியாவுடன் இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார்.

பாகிஸ்தானின் வளர்ச்சியில் தொண்டு நிறுவனங்களின் பங்கு என்ற தலைப்பில் இஸ்லாமாபாத்தில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இதில், அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி பேசியதாவது: இந்தியாவுடன் போர் புரிந்த காலம் எல்லாம் முடிந்து விட்டது. காஷ்மீர், சியாச்சின், தண்ணீர், தீவிரவாதம் என்று எந்த பிரச்னையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் தயாராகி விட்டது. இருநாடுகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, எல்லாவற்றையும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்று கொள்கை முடிவெடுத்து விட்டோம். இந்திய பிரதமருக்கு நட்புடன் கை நீட்டுகிறோம்.

சியாச்சின் பனிமலைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் 138 பேர் பலியான நிலையில், அங்கிருந்து இராணுவத்தை வாபஸ் பெறுவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். தீவிரவாதம், பிரிவினைவாதத்திற்கு அறியாமையும், வறுமையும்தான் காரணம். அதை போக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கிலானி பேசினார்.