தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது!

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. திருப்பூர் விவசாயி கந்தசாமி முதலில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாட்டில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் விழுப்புரம் கல்லூரி மாணவி நிவேதா சென்னை மருத்துவமனையில் இறந்தார். மேலும் சென்னையைச் சேர்ந்த மஞ்சுளா மதுரையைச் சேர்ந்த பெண் காளியம்மாள் ஆகியோரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்கள்.

தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் பலர் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது மேலும் 5 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். கேளம்பாக்கத்தில் வசிக்கிறார். 57 வயதான அவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரது ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை மருத்துவமனையின் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.