முன்பெல்லாம், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே புறப்படும் போது, கண்ணாடி, பணம், பேனா என எப்போதும் தேவைப்படக் கூடிய பொருட்களை எடுத்து செல்வார்கள். எதுவும் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை யோசித்து பார்த்து விட்டு போவார்கள். ஆனால், இன்றைய உலகில் இந்த பட்டியலில் கைத்தொலைபேசி முதலிடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்தின் ‘செக்யூர் என்வாய்’ அமைப்பு, கைத்தொலைபேசி பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவின்படி, ‘கைத்தொலைபேசி இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. கைத்தொலைபேசி இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என்று 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
நோமொபோபியா (கையில் செல்போன் இல்லையோ என்ற பயம்), கைத்தொலைபேசி தொலைந்து விடுமோ, யாராவது அதில் உள்ள தகவல்கள், படங்களை பார்த்து விடுவார்களோ என்ற கவலையும் 66 சதவீதம் பேருக்கு எந்நேரமும் உள்ளது.
இந்த பயத்துக்கு 18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 77 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதுடையோர் 68 சதவீதம் பேரும் ஆளாகியுள்ளனர்.
மேலும், 75 சதவீதம் பேர் கழிவறையில் கைத்தொலைபேசியை பயன்படுத்துகின்றனர். 49 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத்துணை கூட தனது கைத்தொலைபேசியை பார்க்கக் கூடாது என நினைக்கின்றனர். 58 சதவீதம் பேர் பணிமனைக்கு தனியாகவும், சொந்த பயனுக்கு தனியாகவும் ஒரு கைத்தொலைபேசி வைத்து கொள்கின்றனர். கைத்தொலைபேசி பத்திரமாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு நாளாந்தம் 34 முறை வருவதும் ஆய்வில் தெரியவந்தது