நஜிப்பை எதிர்க்கட்சி தலைவராக்க சிலாங்கூர் இந்தியர்களிடையே பலத்த ஆதரவு!

வரவிருக்கும் தேர்தலில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் தலைவராக்க வேண்டும் என்ற வகையில் சிலாங்கூர் இந்தியர்களின் கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது.

இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் மலாயா பல்கலைக்கழகத்தின் சனநாயக தேர்தல் ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. (இதன் தகவலை முழுமையாக காண இங்கே சொடுக்கவும்.)

நஜிப் வழங்கிய ரிம 500-ஆல் தேசிய முன்னணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக 92% இந்தியர்களும் 66% மலாய்காரர்களும் 55% சீனர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

பிரதமர் மக்களுடன் இனக்கமாக உள்ளதாக 89% இந்தியர்கள் தெரிவிக்கும் அதேவேளையில் 86%-தினர் அவர் பயன்தரும் தலைமைத்துவத்தை வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால், பிரதமர் பொருளாதாரத்தை நல்ல வகையில் வழி நடத்துகிறார் என்று 42% சீனர்கள் மட்டுமே ஒத்துக்கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு 60%-தினர் மக்கள் கூட்டணிக்கு என்றும் 20%-தினர் தேசிய முன்னணிக்கும் பாக்கி 20% முடிவு செய்யாத நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி செம்பருத்தி இணையத்திற்கு விளக்கமளித்த வழக்கறிஞர் கா. ஆறுமுகம், இந்த ஆய்வு பெர்சே 3.0 பேரணிக்கு முன்பு நடத்தப்பட்டதாகும். எனவே தற்போது முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்கிறார்.

அண்மைய நிகழ்வுகளான புத்திரஜெயாவில் ம.இ.கா இளைஞர் பிரிவால் தாக்கப்பட்டது, அம்பிகா வீட்டின் முன் மாட்டிறைச்சி பேர்கர் விநியோகம், ஓய்வு பெற்ற இராணுவ குழுவினர் அம்பிகா வீட்டின் முன் ஆடிய இடுப்பாட்டம் போன்றவை தொடர்ந்து இந்தியர்களின் தேசிய முன்னணியின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்து வருகின்றன.

சிலாங்கூரை பொறுத்த மட்டில் 60%-தினர் மக்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டியபோது, ” பெருபான்மை இந்தியர்கள் நஜிப்புக்கு ஆதரவு காட்டுகிறார்கள், ஆனால் சிலாங்கூரில் தேமு-வை புறக்கணிக்கின்றனர். இந்த சூழலில் மக்கள் கூட்டணி வேண்டும் அதேவேளை நஜிப்பும் வேண்டும் என்றால், அவர் எதிர்க்கட்சியின் தலைவராகத்தான் நாடாளுமன்றம் செல்வார்” என்று நகைச்சுவையோடு பதில் அளித்தார் சுவராம் மனித உரிமை கழகத் தலைவருமான கா. ஆறுமுகம்.