பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் உலக சாதனை!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அட்ரியன் உன்கரை தோற்கடித்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டி வரலாற்றில் பெடரரின் 234-வது ஒற்றையர் வெற்றி இதுவாகும். இதன் மூலம் பெடரர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு அமெரிக்காவின் ஜிம்மி கான்னோர்ஸ் 233 வெற்றிகள் பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சுலோவேனியாவின் பிளாஸ் காவ்சிச்சை வென்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை பெலாரசின் விக்டோரிய அஸரென்கா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் பிசென்மெயரை தோற்கடித்தார். இதே போல் சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), இவானோவிச் (செர்பியா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது. இதன் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-மகேஷ் பூபதி ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் எரிக் பூடோரக்-காப்ஸ் ஜோன்ஸ் இணையை வீழ்த்தியது. இதே போல் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ரஷியாவின் எலினா வெஸ்னினா கூட்டணி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் ஹிராடெக்கா-செர்மாக் ஜோடியை விரட்டியது.