பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த தமிழ்ப்பள்ளிக்கான உண்ணாவிரதப் போராட்டம்

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்.

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில உரிமை விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமும் சத்தமில்லாமல் மஇகா தலைவர்களுக்கு கைநழுவிச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பு குறித்த ஒரு விழிப்புணர்வையும் அது ஏற்படுத்தியுள்ளது.
 
நில விவகாரம் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கம் முதலில் கேள்வி எழுப்பிய போது, அந்நிலத்தில் தங்களது தலைமையகம் எழுப்பப்படும் என மஇகா கூறியது. இப்போது அங்கு மாணவர் தங்கும் விடுதி கட்டப்படும் என அது கூறுகிறது.

தற்போது மஇகாவுக்கு அவசரத் தேவை அல்லது நெருக்குதல் எதுவும் இல்லாதால், நிலம் பள்ளியிடம் ஒப்படைக்கப்படுவதே அருஞ்செயலாகும்!

ஏனெனில் பள்ளிக்கு ஒரு தரமான திடலும் வகுப்பறைகளும் தேவைப்படுகின்றன. எந்தவொரு தொடக்கப்பள்ளியும் 420 மாணவர்களுக்கு மேல் கொண்டிருந்தால், அதற்கு 5.4 ஏக்கர் நிலம் ஒதுக்கப் படலாம் என்பது அரசாங்கக் கொள்கைகளில் ஒன்று!     
 
முன்னாள் எப்பிங்ஹாம் தோட்டத்தை வீடமைப்புத் திட்டத்திற்கு மாற்றிய வீடமைப்பு நிறுவனம், அப்பகுதி தமிழ்ப்பள்ளிக்குரிய 6 ஏக்கர் நிலத்தை அன்றைய சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் கொடுத்தது.
 
ஜுன் 30, 1999 என தேதியிடப்பட்டுள்ள அக்கடிதத்தில், இரு பிரிவுகளாக இருந்த ‘லோட் 28814’ நிலத்தின் ஒரு பகுதியை தங்கள் தரப்புக்கு வழங்கும்படி அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் மஇகா விண்ணப்பித்துள்ளது. அதன்படி ஒரு பகுதி நிலம் பள்ளிக்கும், மறு பகுதி அப்போதைய மஇகாவின் அறங்காவலரான சாமிவேலுவின் பெயருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 
தங்களைப் பொறுத்தவரை அந்நிலம் மஇகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜி. பழனிவேலும் எம். சரவணனும் கூறியுள்ளனர்.

பள்ளி நிலத்தை மீண்டும் ஒப்படைத்தால், அன்று சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சிபுரிந்த பாரிசான் நேஷனல் அரசுக்கு வழங்கப்பட்ட 3 மில்லியன் ரிங்கிட்டை திருப்பி கொடுப்பதாக தற்போதைய பக்காத்தான் ராக்யாட் சிலாங்கூர் அரசு கூறுகிறது.
 
அத்தொகையைக் கொண்டு மஇகா வேறொரு நிலத்தை வாங்கிக் கொள்ளலாம். 
 
2006-ம் ஆண்டில் புகிட் ராஜா தமிழ்ப்பள்ளிக்கு 5.4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அப்போது மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த எஸ். சிவலிங்கம் பள்ளிக்கு 3 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு, எஞ்சிய 2.4 ஏக்கரை தனியார் தரப்பினர்களுக்கு தாரை வார்த்துவிட்டார்.
தற்போதைய மாநில மக்கள் கூட்டணி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரின் முயற்சியில் அந்த 2.4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இதேபோல் ஷா ஆலாமில் உள்ள ராஸாக் தமிழ்பள்ளிக்கு வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தை மட்டுமே பள்ளி பயன்படுத்த முடிகிறது. மற்றொரு ஏக்கரில் பெட்ரோல் நிலையம் வீற்றிருக்க, மீதமுள்ள ஒரு ஏக்கர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை!
 
சிலாங்கூரில் தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தின் நிலை என்ன என்பதை ஓரளவு அறியமுடிகிறது. ஆனால் பிற மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குரிய நிலங்களின் தலையெழுத்து என்ன? எந்த அளவுக்கு அவை மஇகாவால் கையாடப்பட்டது என்பதை யார் அறிவர்?