மத்திய அரசாங்கத்தின் மீது சீனர்கள் மற்றும் மலாய்காரர்களை விட அதிகமான இந்தியர்கள் ஆத்திரமாக இருப்பதாக மெர்டேக்கா மையத்தின் ஆய்வு பற்றி கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் செம்பருத்தியிடம் கூறினார்.
கடந்த மே-மாதம் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மெர்டேக்கா மையம் நடத்திய நாடு தழுவிய அளவிலான ஆய்வு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன் விபரங்களை காண இங்கே சொடுக்கவும்.
“இந்த ஆய்வில் அரசாங்கத்தின் மேல் (மத்திய அரசாங்கம்) சுமார் 20% இந்தியர்கள் ஆத்திரமாக உள்ளதாக கணித்துள்ளனர். அதேவேளை அக்கணிப்பின்படி சீனர்கள் 17%, மலாய்காரர்கள் 3% அரசாங்கத்தின் மேல் ஆத்திரமாக உள்ளனர். மற்ற இனங்களை விட அரசாங்கத்திடம் இந்தியர்களுக்குத்தான் அதிக ஆத்திரம்” என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.
பெர்சே 3.0 பேரணிக்கு பிறகு அம்னோ ஆதரவு கொண்ட மலாய்காரர்கள் அம்பிகா வீட்டின் முன் நடத்திய மாட்டிறைச்சி பேர்கர் விநியோகமும் ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் குணிந்து தங்களின் பின்புறத்தை காட்டி அருவருப்பாக தேகப் பயிற்ச்சி மேற்கொண்டதும் ‘துரத்துவோம் 1.0 (Halau 1.0)’ என்ற இளவயது மோட்டார் சைக்கிள்களில் வந்து அம்பிகாவை முற்றுகைவிட்டதும் இந்தியர்களின் அதிக கோபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்கிறார்.
அந்தக் கணிப்பில் பாரிசான் மத்திய அரசாங்கத்தின் மீது 46% இந்தியர்கள் திருப்தி கொண்டிருப்பதாகவும், 30% திருப்தியற்ற நிலையிலும் மேலும் 20% ஆத்திரமாக இருப்பதாகவும் தெரிகிறது. ஒட்டு மொத்தத்தில் பெரும்பான்மை இந்தியர்களுக்கு தேசிய முன்னணி மீது இன்னமும் நம்பிக்கை அதிகமாகவில்லை என்றே ஆய்வு காட்டுகிறது. ஆனால் பிரதமர் நஜிப்பின் செயலாக்கத்தின் மீது 72% இந்தியர்கள் திருப்தி கொள்வதாக காட்டுகிறது.
தொடர்ந்து நடைபெறும் அரசியல் சார்ந்த வன்முறை நிகழ்வுகள், தேசிய முன்னணிக்கு பாதகமாகவே அமையும். ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் மிகவும் கவனமாக பல்லின மக்கள் வாழும் மலேசியாவை வழி நடத்த வேண்டும். குண்டர் கும்பலைக் கொண்டு பயமுறுத்தி மக்களை அடிபணிய வைக்கும் காலம் மலையேறிவிட்டது. இப்போது மக்கள் விழிப்புணர்வு பெற்ற நிலையில் பலவகையான சமூக தொடர்பு சாதனங்கள் வழி உடனுக்குடன் செய்திகளை அறிகின்றனர் பரிமாறிக்கொள்கின்றனர். எனவே, தேர்தலில் மக்கள் எப்படி முடிவு செய்வார்கள் என்பதை வன்முறை கொண்டும் மிரட்டல் கொண்டும் சாதிக்க இயலாது என்கிறார் ஆறுமுகம்.