பாதுகாப்பு விஷயங்கள்: இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியான் பனேட்டா, இந்தியப் பிரதமர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக புதுடில்லி சென்றுள்ளார்.

இந்திய அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியப் பகுதியில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காளியாக பார்க்கும் அமெரிக்கா, அதன் மூதல் அப்பிராந்தியத்தில் சீனாவின் ஆளுமையை சமன் செய்ய முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆசியப் பகுதிக்கான ஒன்பது நாள் பயணத்தை மேற்கொள்ளும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர், தனது இந்திய பயணத்தின் முதல் நாளன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கைகளில் ஆசிய பசிஃபிக் பகுதிக்கே மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அதிபர் பராக் ஒபாமா கூறியிருந்தார்.

ஆசிய பசிஃபிக் பகுதியில் சீனா முக்கிய பிராந்திய வல்லரசாக இருக்க விழையும் சூழலில், அந்நாட்டுக்கு சவால் விடும் வகையிலேயே அமெரிக்க அதிபரின் கருத்துக்கள் இருந்ததாக விமர்சகர்களால் பார்க்கப்பட்டது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே ஆண்டனி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனையும் லியான் பனேட்டா சந்திக்கிறார்.

அமெரிக்கா, இந்தியாவை ஒத்த கருத்துடைய ஒரு கூட்டாளியாகவே பார்க்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

TAGS: