இசைஞானி இளையராஜாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் (04.06.2012) சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.
விழாவில் ‘பால் நிலாப் பாதை’ என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக்கொண்டர்.
‘எனக்கு எதுவோ உனக்கும் அதுவே’ என்ற நூலை கவிஞர் மு.மேத்தா வெளியிட கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பிறந்தநாள் கேக்கை இளையராஜா வெட்டி கமல்ஹாசனுக்கு ஊட்டினார்.
இதில் நடிகர் பார்த்திபனும் கலந்து கொண்டு இளையராஜாவை வாழ்த்தினார். இது குறித்து தனது முகநூலில் பார்த்திபன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.
“நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்!!!“
உடல் ரீதியாக அல்ல, மனரீதியாக. ஒரு வார்த்தை ஏற்கனவே நம்முள் பதிவு செய்திருக்கும் அர்த்தத்தை மீறி புதிதாய் ஒன்றை விதைப்பதற்குள், அதிர்ச்சி முட்கள் முளைத்து விடுகின்றன.
ஓரின சேர்க்கை பற்றி புதிதாய் நான் ஒன்று சொன்னாலும், அது ‘இனத்தோடு இனம் சேரும்’, ‘கற்றோரை கற்றோரே காமுறுவர்’ அடிப்படையிலேயே.
ஆற்றல் மிகுந்த ஒரு கலைஞனின் ஆளுமையில், அதை தன்னுள் வாங்கிக்கொள்ள ஏங்கும் கலைஞனின் மனம் கவ்விக்கொள்கிறது.
பச்சையாக சொல்வதானால் மனதோடு மனம் கலவிக் கொள்கிறது. ஈர்ப்பால் காதல் கொள்ள எதிர்பால் தேவை படுவதில்லை.இதைத்தான் ஓரின சேர்க்கையாளன் என்றேன்.
மகா கலைஞன் இளையராஜாவின் இசை மீது நான் கொண்டிருக்கும் காதலை இவ்வாறு மொழி பெயர்த்தேன்… என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.