சிதம்பரம் பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

சிவகங்கை தேர்தல் வெற்றி தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ள நிலையில், அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையேல், அமைச்சரவையிலிருந்து அவரை பிரதமர் நீக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

சிதம்பரம் மோசடியாக வெற்றி பெற்றார் என்பது தான், அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. கிரிமினல் குற்றச்சாட்டுகளை சிதம்பரம் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில், அவர் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிப்பது, ஜனநாயகத்துக்கு களங்கமாக அமைந்து விடும். தேர்தல் முறைகேடு என்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிதம்பரம், காலம் தாழ்த்தாது, மத்திய உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் பதவியை சிதம்பரம் ராஜினாமா செய்யவில்லை எனில், அமைச்சரவையிலிருந்து அவரை உடனடியாக பிரதமர் நீக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதே போல், “மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், பதவியில் நீடிக்க உரிமையில்லை. எனவே, அவரை உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” என, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம், ஜனநாயக ரீதியாக வெற்றி பெறவில்லை. உண்மையிலேயே அவர் தோல்வி அடைந்த வேட்பாளர் தான்.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில், அமைந்துள்ள சிதம்பரத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, சிவகங்கை அ.தி.மு.க., வேட்பாளர் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை எதிர்கொள்ள அச்சப்பட்டு, காலம் தாழ்த்தும் வகையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம் வழக்கை சந்திக்க வேண்டும் என, சிதம்பரத்துக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: