இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி.எஸ். சம்பத், பதவியேற்ற 24 மணிநேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் ஜூலை 2-ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 4-ஆம் தேதியாகும். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19-ம் தேதி நடைபெறும். போட்டி இருப்பின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 22-ம் தேதி நடைபெறும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் முறை: முன்மொழிவோர், வழிமொழிவோர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை புது தில்லியில் உள்ள தேர்தல் அதிகாரி குறிப்பிடும் இடத்தில் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என சம்பத் தெரிவித்தார்.