மூத்த திமுக தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தமிழகம்: சிறையில் இருந்துவரும் தமிழகத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

செல்வாக்கு மிகுந்த சேலம் மாவட்ட திமுகவின் செயலாளரான வீரபாண்டி ஆறுமுகத்திற்கு 75 வயது ஆகிறது.

கடந்த ஜுன் நான்காம் நாளன்று சேலம் அங்கம்மாள் காலனியில் நடந்த வன்முறை சம்பவம் ஒன்றின் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சென்னையை அடுத்த புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது வேலூர் சிறையில் இருந்துவரும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் அவர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்பட்டுவதாக தெரிவிக்கும் ஆணை தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகத்தின் மீது ஐந்து நில அபகரிப்பு வழக்குகளும், அங்கம்மாள் காலனி சம்பவம் தொடர்பான ஓர் வழக்கும், ஆக மொத்தம் ஆறு வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சேலம் மாநகர காவல்துறை ஆணையர் மாஹாளி கூறினார்.

அண்மைக் காலங்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.