இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி சாங்மாவை ஆதரிப்பதாக அறிவித்தாலும், தேசிய ஜனநாயக முன்னணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
அந்தக் கூட்டணியில் இருக்கும் ஒரு பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியால் முன்நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதே போன்ற ஒரு நிலைப்பாட்டை பா ஜ க வுக்கு மிகவும் நெருக்கமான கட்சியாக பார்க்கப்படும் சிவசேனாவும் எடுத்துள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை ஆதரிப்பது என்பதில் இடதுசாரி கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து இல்லை.
இடதுசாரி முன்னணியில் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், புரட்சிகர சோஷலிச முன்னணி(RSP)யும் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் ஆளும்கட்சியாகவும், இதுநாள் வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்துவரும் கட்சியான திரிணமூல் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகவில்லை.
அக்கட்சி முன்னர் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை மீண்டும் தமது விருப்ப வேட்பாளாராக பரிந்துரை செய்தது. ஆனால் கலாம் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துவிட்டார்.
பாஜக, அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் வேட்பாளாரக நிறுத்தப்பட்டுள்ள சாங்மா புதன்கிழமை அவர் சார்ந்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
எனினும் அவரது மகளும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் துணை அமைச்சருமான அகதா சாங்மா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும், மத்திய அரசிலும் தொடருவாரா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது கட்சிகள் தெரிவித்துள்ள ஆதரவின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜி அவர்களே கூடுதலான வாக்குகள் பெறும் வாய்ப்புக்ள் உள்ளன என்று அரசியல் விமர்சர்கள் கூறுகிறார்கள்.