மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை அபுஜிண்டால் நேற்று வெளியிட்டான். அந்த கடற்படையை லஷ்கர் தீவிரவாதிகள் சமீபத்தில் சீரமைத்து மேலும் நவீனப்படுத்தி உள்ளனர்.
அந்த படையில் உள்ள தீவிரவாதிகள் அனைவரும் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிர்பூரில் உள்ள மங்களா அணைக்கட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தவும், இந்திய கடற்படை மீது தாக்குதல் நடத்தவும் அந்த அணைக்கட்டில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதை தீவிரவாதி ஜிண்டால் உறுதிபடுத்தினான்.
மங்களா அணைக்கட்டு பகுதியில் பயிற்சி பெற்று வரும் தற்கொலை கடற்படை தீவிரவாதிகளில் 8 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் ஜிண்டால் தெரிவித்துள்ளான். அந்த 8 வாலிபர்களுக்கும் தானே நேரில் பயிற்சி கொடுத்ததாகவும் அவன் டெல்லி போலீசாரிடம் கூறினான்.
மராட்டியம், குஜராத், கடலோர பகுதிகளை தாக்கும் நோக்கத்துடன்தான் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சதி திட்ட பயிற்சியில் இந்திய வாலிபர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட கசாப் உயிருடன் சிக்கிக் கொண்டதால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்காலத்தில் அத்தகைய நெருக்கடி ஏற்படகூடாது என்பதற்காகவே இந்திய இளைஞர்களை கடற்படையில் ஐ.எஸ்.ஐ. சேர்த்து பயிற்சி அளித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பே கடற்படை தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மீண்டும் தாக்குதல் நடத்த இது சரியான நேரம் அல்ல என்று ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தடுத்து விட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்தே வேறு ஒரு திட்டத்துடன் ஜிண்டால் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தான். ஆனால் இணையத்தளத்தை பயன்படுத்தியதால் உளவுத் துறையின் வலையில் சிக்கிக் கொண்டான்.