குடிப்பழக்கத்தை கைவிட நூதன போராட்டம் !

பொதுமக்களிடம் அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, மதுக்கடை முன்பு, திரளான பெண்கள் திரண்டு, நீண்ட வரிசையில் நின்றதால், குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர்.

கேரள மாநிலத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மாநில அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும், கேரள அரசு, மதுபான கழகத்திற்கு, ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், போதை பொருட்கள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி, , கேரளா, திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரில், நூதன போராட்டத்தை, கேரள மதுபான எதிர்ப்பு சமிதியைச் சேர்ந்த பெண்கள் நடத்தினர். காலையிலேயே, மதுபான சில்லறை விற்பனை கடை திறப்பதற்கு முன்பே, அங்கு பெண்கள் திரண்டனர். கடை திறந்ததும், வழக்கம்போல் வந்த குடிமகன்கள், அங்கு நீண்ட வரிசையில் நிற்கும் பெண்களை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.

“இது என்னடா நாம கடை மாறி வந்து விட்டோமா என முதலில் குழப்பம் அடைந்தாலும், அதே கடை தான் என்பதை உறுதி செய்துகொண்டு, இங்கு பெண்கள் வந்துள்ளார்களா, எதற்கு என்பது தெரியாமலும், மது வாங்குவதா வேண்டாமா’ என குழம்பியும் நின்றனர். சிலர், பெண்களை உற்றுநோக்கி என்ன சொல்வது என தெரியாமல் விழித்தனர்.

சற்று நேரம் வரிசையில் நின்ற பெண்கள், அங்கிருந்து நகராததால், சில குடிமகன்கள் என்ன ஏது என விசாரித்தனர். அதன் பிறகு தான், “மது பழக்கத்தை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர்’ என்பது தெரிந்து, சிலர் அங்கிருந்து, “ஜூட்’ விட்டனர். பின்னர் அப்பெண்கள் போராட்டம் நடத்திவிட்டு, அங்கிருந்து அகன்ற பிறகே, குடிமகன்களால் மது வாங்க முடிந்தது.

TAGS: