யூரோ கோப்பையை 3-வது முறையாக வென்று ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
உக்ரைனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்து யூரோ கோப்பையை வென்றது. இத்தாலி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
உலக கோப்பை கால்பந்து போட்டியை அடுத்து மிகவும் பிரசித்து பெற்றது யூரோ கோப்பை கால்பந்து ஆகும்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப்போட்டி உலக கோப்பையை போலவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
16 அணிகள் பங்கேற்ற 14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைன் நாடுகளில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 14-வது நிமிடத்திலே ஸ்பெயின் வீரர் டேவிட் சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். அதன்பிறகு இத்தாலி வீரர்கள் தங்கள் பங்கிற்கு கோல் அடிக்க மும்மரமாக விளையாடினாலும் அவர்கள் முயற்சி ஸ்பெயின் வீரர்களால் முறியடிக்கப்பட்டது.
ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா சிறப்பாக விளையாடி 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலே ஸ்பெயின் அணி 2 கோல்களுடன் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் அடுத்த பாதியின் இத்தாலி வீரர்கள் கோல் அடிக்க விடா முயற்சி செய்தனர். ஆனாலும் ஸ்பெயின் வீரர்கள் அவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் அனல் பறந்தது.
ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டடீரஸ் கோல் அடித்தார். இதனால் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட ஸ்பெயின் அணியிடம் வந்தது. டோ ரஸ் கோல் அடித்த சிறிது நேரத்தில் அதாவது ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜுவான் மாதா கோல் அடித்தார்.
இத்தாலி வீரர்கள் கடைசி வரை போராடி விளையாடிய போதிலும் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
ஸ்பெயின் அணி 1964 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் யூரோ கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் தற்போதும் இத்தாலியை வீழ்த்தி மூன்றாவது முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்னதாக ஜெர்மனி அணி அதிகபட்சமாக 3 முறை (1972, 1980, 1996) யூரோ கோப்பையை வென்றுள்ளது. அதனை தற்போது ஸ்பெயின் அணி சமன் செய்துள்ளது.
எந்த ஒரு அணியும் தொடர்ந்து 2 முறை ஐரோப்பிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இல்லை. ஆனால் ஸ்பெயின் அணி 2008-ம் ஆண்டு மற்றும் தற்போதைய போட்டியில் வென்றதன் மூலம் அந்த சாதனையையும் நிறைவேற்றியுள்ளது.
2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.