இலங்கையில் வழிபாட்டு இடங்கள் தாக்கப்படுவதற்கு சென்னையில் எதிர்ப்பு

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கூறி சென்னையில் சர்வமதத் தலைவர்கள் பங்குபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அழிக்கப்படுவதாகவும் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள்.

அப்படியான ஒரு போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காவே அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் எனும் அமைப்பு செவ்வாய்கிழமை (10.7.2012) சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.

தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம். சின்னப்பா இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்றிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து மதத் தலைவர்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தென்னிந்திய திருச்சபையின் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினர்கள், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபை வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுவது ஏற்கனவே போப் பெனடிக்ட் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செலப்பபட்டுள்ளது என்றும் இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஐ.நா தலையிடவும், அவர்கள் அனைத்துரிமைகளையும் பெற்று வாழும் வகையில் அரசியல் தீர்வு உருவாகவும் இந்தியா பல்வேறு தளங்களில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரினர்.