அமெரிக்க கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் பலி

துபாய்க் கடற்பரப்பில் மீன் பிடி படகொன்றின் மீது அமெரிக்க கடற்படையினர் சுட்டதில், படகில் இருந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்று தெரிகிறது.

இந்தச் சம்பவம் துபாய் அருகேயுள்ள ஜெபல் அலி என்ற துறைமுகத்துக்கு அருகே நடந்ததாக பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கொல்லப்பட்ட மீனவரும் , காயமடைந்த மற்ற மீனவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மீனவர்களின் படகு, அமெரிக்க கடற்படையின் எண்ணெய் தாங்கிக் கப்பலான, ராப்பஹன்னோக் என்ற கப்பலை நோக்கி வேகமாக வந்ததாகவும், வரவேண்டாம் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அது அலட்சியப்படுத்திவிட்டு வந்ததாகவும் அதனை அடுத்து, எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் ,அந்தப்படகை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அமெரிக்க கடற்படை கூறுகிறது.

இந்த ராப்பஹன்னோக் என்ற கப்பல், அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைக்கு எண்ணெய் விநியோகிக்க அங்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

வளைகுடாக் கடற்பரப்பில், இரானிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததால், அந்தப்பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையின் நடமாட்டத்தை அதிகரித்திருக்கிறது. இந்த சம்பவம் இந்த இரானியப் பிரச்சினையுடன் தொடர்புடையதா என்று தெரியவில்லை.

இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவல் வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசு இது குறித்து ஒரு முழுமையான விசாரணையை நடத்தும் எனவும் நான்சி பவல் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தச் சிறிய இயந்திரப் படகில் இருந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமது இரங்கலை தெரிவித்துக் கொளவதாக கூறியுள்ளது. அமெரிக்க கடற்படை படகு விடுத்த கடுமையான எச்சரிக்கையை அந்தப் படகு புறந்தள்ளியதை அடுத்தே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது எனவும் அமெரிக்கத் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான முழு விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில், அமெரிக்கா அரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டின் அரசு ஆகியவற்றுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் அமெரிக்க கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் இராமநாதபுரம் மாவட்டம் தோப்புவலசை கிராமத்தைச் சேர்ந்த ஆ. சேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 27. பத்து மாதங்களுக்கு முன்புதான் அவர் துபாய்க்குச் சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுபடத்துவங்கினார் என அவரது தாய் நாகவல்லி கூறுகிறார்.

அச்சம்பவத்தில் காயமுற்ற மூவருமே இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் இருவர், முத்துக்கண்ணன் (35) மற்றும் பாண்டுகநாதன் (25), மோர்பண்ணை எனும் கிராமத்தில் பிறந்தவர்கள் மூன்றாமவர் காரையூரைச் சேர்ந்த முத்துமுனியராஜ் (30), காயமடைந்தவர்கள் தற்போது துபாயில் சிகிச்சைபெற்றுவருவதாகவும், முத்துமுனியராஜின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இராமநாதபுரத்திற்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குக் கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த மூவரும் கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகப் பகுதியில் தங்கி மீன்பிடியில் ஈடுபட்டுவந்ததாகவும் தெரிகிறது.

இறந்தவரின் உடலையும், காயமடைந்தவர்களையும் உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவரவேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் கோரியிருக்கின்றனர்.

இது தொடர்பில், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டரசுகளுடன் கலந்துபேசி முறையான விசாரணைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதை துபாயிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்யவேண்டுமெனவும் அவர் கோரியிருக்கிறார்.

மரணமடைந்த சேகரின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் இந்திய ரூபாயும், காயமுற்ற மற்ற மூவரின் குடும்பங்களுக்குத் தலா 50 ஆயிரம் இந்திய ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கவும் ஜெயலலிதா உத்திரவிட்டிருக்கிறார்.

ஒரு புறம் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இன்னொரு புறம் கச்சத்தீவு தொடர்பான நிகழ்வுகள் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றன, இந்நிலையில் பல்வேறு திசைகளிலும் மீனவ இளைஞர்கள் பயணித்து வாழவேண்டியிருக்கிறது, எனவே அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அரசுகள் உறுதிசெய்யவேண்டுமென்கின்றனர் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்.

TAGS: