மருமகளுக்கு தனது கிட்னியை தானம் கொடுத்த மாமியார்!

மராட்டிய மாநிலம் நாசிக் தாலுகாவில் உள்ள பலஷிகாவின் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). இரண்டு குழந்தைகளுக்கு தாய். காயத்ரிக்கு கடந்த ஆண்டு கிட்னி தொடர்பான நோய் பாதித்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ஒரு கிட்னி முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.

கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ஜஸ்பாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயத்ரிக்கு கிட்னி தானம் செய்ய அவரது மாமியார் கலீயாபாய் (வயது 65) முன் வந்தார்.

இதையடுத்து மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கலீயாபாயிடம் இருந்து எடுக்கப்பட்ட கிட்னி காயத்ரிக்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை  கடந்த 6-ந் தேதி நடந்தது.

இப்போது காயத்ரி புத்துயிர் பெற்று நல்ல நிலையில் உள்ளார். இன்னும் ஒரிரு நாட்களில் காயத்ரி வீடு திரும்புவார். இது பற்றி காயத்ரி கூறுகையில்; “எனது மாமியார் மிகவும் நல்லவர். அவரது கருணையால் உயிர் பிழைத்துள்ளேன். அவரது இந்த நற்செயலுக்காக நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

கிட்னி தானம் கொடுத்த மாமியார் கலீயாபாய் கூறியதாவது:

“எனது மருமகளின் ஒரு கிட்னி செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவளுக்கு டயாலிஸ் செய்து வந்த போதும், வலி நிற்கவில்லை. தினமும் வலியால் துடித்தாள். எனவே என்னுடைய கிட்னியை தானம் கொடுக்க முடிவு செய்தேன். காயத்ரி என்னைவிட இளையவள். இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள். அவள் எனது மகனின் மனைவி. அப்படி இருக்கையில் என்னால் எப்படி உதவாமல் இருக்க முடியும்? எனது மகன் ஒரு கிட்னியை காயத்ரிக்கு தானம் செய்ய விரும்பினான். நான்தான் அவனிடம் வேண்டாம் என்று சொல்லி, நானே கிட்னி தானம் செய்ய முன் வந்தேன். எனது ரத்த குரூப் ‘ஓ’ அவளின் ரத்த குரூப் ‘ஏபி’பாசிட்டிவ். எனவே எனது கிட்னி அவளுக்கு பொருந்தி விட்டது” என்றார் அவர்.

TAGS: