விபத்தில் சிறுமி பலி; பள்ளிப் பேருந்து தீயிட்டு எரிப்பு!

சென்னையை அடுத்த சேலையூர் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி, புதன்கிழமை (25.7.12) பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஒரு துவாரம் வழியாக கீழே விழுந்து அவள் பயணித்த பேருந்து ஏறியே கொல்லப்பட்ட சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பழுதுள்ள பேருந்தை இயக்கியதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்திரவிட்டிருப்பதாகவும் சுருதியின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் இந்திய ரூபாய் நிவாரணம் வழங்கியிருப்பதாகவும் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் எம் விஜயன், பேருந்து ஓப்பந்ததார்ர், பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்து பராமரிக்கும் பொறுப்பிலிருந்த சிறுவன் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றமும் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது.

சரியாக பராமரிக்கப்படாத ஒரு பேருந்திற்கு தகுதி சான்றிதழ் எப்படி கொடுக்கப்பட்டது என்பதை நாளையே வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ஞ் உத்தரவிட்டது.

பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தானாகவே முன் வந்து நீதிமன்றம் சம்பவத்தை வழக்காக்கி விசாரிக்க தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாணவி பலியானதை கண்டு ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் பேருந்திற்கு தீயிட்டனர். இன்று பெருமளவில் அப்பகுதி மக்கள் குழுமி, இறந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.

TAGS: