சென்னையில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு முற்றுகை

இந்திய நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே டெல்லியில் ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அன்னாஹசாரே ஆதரவாளர்களும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம் உள்பட 15 மந்திரிகள் மீதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் ஊழல் புகார் கூறி வருகிறார்கள். நேற்று டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே அன்னாஹசாரே ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீடு உள்ளது. இன்று காலை அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ப.சிதம்பரம் வீட்டு முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.

ஊழல் புகார் கூறப்படும் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுவான லோக்பால் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

உடனடியாக போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். அவர்கள் அங்கிருந்து வேன்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

TAGS: