தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும்: சீமான்

சென்னை: “உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், நாங்களும், சிங்கள அரசும், அதன் படைகளும் நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும் என்று தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் மாணவர் பாசறையின் சார்பில், ஆதம்பாக்கத்தில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சீமான்;

“ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள். தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாகத் துடைக்க, தம்மையே அழித்துக்கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப் புலிகள். அவர்கள் எம்மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர்களின் அழுகையை நிறுத்துவதற்காக செத்தவர்கள். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் எனது அண்ணன் பிரபாகரன். அவருடைய படத்தை விற்பதற்கு காவல் துறை தடை செய்கிறது என்றால், காவல் துறை மக்களை காக்கும் துறையா அல்லது ஆட்சியாளர்களின் ஏவல் துறையா என்று கேட்கிறேன்.”

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது இந்திய மத்திய அரசு. எத்தனை தடைகள் போட்டாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக எமது மக்களின் ஆதரவை முழுமையாகத் திரட்டுவோம். இப்படிப்பட்ட தடைகளால் ஈழத் தமிழினத்தின் விடுதலை போராட்டத்தை முடக்கிடவும் முடியாது, அதற்கான ஆதரவு சக்திகளாக உள்ள எங்களை அடக்கிடவும் முடியாது. நாங்கள் ஜனநாயக வழியில் அரசியலை முன்னெடுக்கின்றோம், எங்களை சீண்டாதீர்கள், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்காதீர்கள்.”

இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த உதவியால் எங்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது. எமது மக்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது. இப்போது கூட கூறுகிறோம், உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், நாங்களும், சிங்கள அரசும், அதன் படைகளும் நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும்.”

இன்றைக்கு அரசு செய்ய வேண்டியதையெல்லாம் தனியாரிடம் கொடுத்துவிடுகிறார்கள். கல்வியும், மருத்துவமும் அரசிடம் இருக்க வேண்டும், ஆனால் இந்த நாட்டில் அவை யாவும் தனியாரிடம் இருக்கின்றன. தனியார் செய்ய வேண்டிய சாராயம் விற்கும் வேலையை அரசு செய்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலிற்கு முடிவு கட்ட வேண்டுமெனில், இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை சரியாக நிரப்ப வேண்டுமெனில் படித்தவர்கள் அரசியலிறகு வர வேண்டும். இன்றைக்கு எனது நாட்டின் ஏழை, எளிய மக்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குகளை விற்றுக்கொண்டிருக்கின்றனர். இது அவர்களின் குற்றமல்ல, ஆயிரம், இரண்டாயிரத்துக்கு கையேந்தும் நிலையில் அவர்களை வைத்துள்ள இன்றைய அரசியலின் சூழ்சி அது. இந்த நிலையை மாற்ற வேண்டும், அதற்கு ஒரே வழி, இன்றைக்கு மாணவர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் அரசியலிற்கு வர வேண்டும்.”

“ஒரு இலட்சிய வெறியோடு எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம், ஆயுதம் தாங்கி அல்ல, ஜனநாயகப் பாதையில், மக்கள் சக்தியைத் திரட்டி அத்ன மூலம் மாற்றத்தை ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கின்றோம்.” இவ்வாறு சீமான் பேசினார்.

TAGS: