கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தமது நாட்டு பிரச்சனையை மட்டுமல்லாமல் இந்தியாவின் பிரச்சனையையும் சேர்த்து தீர்த்து வைத்துள்ளார் என்பதால் அவருக்கு உயர்ந்த விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டுமாம் இவ்வாறு கூறியுள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி.
இலங்கை தலைநகர் கொழும்பில் அனைத்துலக பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு இன்று நடைபெறவிருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி கொழும்பு சென்றுள்ளார்.
அங்கு அவர் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அவரது மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். அப்போது அவர், இலங்கையின் பிரச்சனையை மட்டும் ராஜபக்சே தீர்க்கவில்லை, இந்தியாவின் பிரச்சனையையும் கூட அவர் தீர்த்துவிட்டார். எனவே அவருக்கு இந்திய அரசு உயரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை அதிபர் மாளிகை வட்டாரங்களும், இலங்கை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன, இன்று நடைபெறும் கருத்தரங்கில் சுப்பிரமணியன் சாமி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.