வட கிழக்கு மக்கள் சென்னையில் இருந்தும் ஓட்டம்!

பெங்களூரை அடுத்து, சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பீதியின் காரணமாக வெளியேறத் துவங்கியிருக்கிறார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்கள் ஊருக்குச் சென்றவண்ணம் இருக்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பெரும்பாலும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள், பல்வேறு இடங்களில் பணியாற்றுபவர்கள். அதில் மாணவர்களும் இருந்தார்கள்.

வெள்ளிக்கிழமை அதிகாலை, குவாஹாத்தி செல்லும் இரண்டு சிறப்பு ரயில்களில் சுமார் 4 ஆயிரம் பேர் புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் பணியாற்றுவோரைத் தவிர, கோவை மற்றும் மதுரையில் பணியாற்றி வந்தவர்களும் சென்னை வந்து சிறப்பு ரயில்களில் சென்றனர்.

சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் பிஷ்னு என்பவர் கூறும்போது, ‘இப்போதைக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காவிட்டாலும், பெரும் அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றும், வரும் 20-ம் தேதி்க்கு முன்னதாக இங்கிருந்து கிளம்பிவட வேண்டும் என்றும் பெங்களூரில் உள்ள எனது நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்’ என்றார்.

சென்னை சிறுசேரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றும் பிந்தேஸ்வர் என்பவர் கூறும்போது, தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் எதுவும் தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கத் தயாராக இல்லை என்று தெரிவித்தார். பெங்களூரில் ஏற்கெனவே நான்கு பேர் கொல்லப்பட்டுவிட்டதாக வதந்தி பரவியுள்ளதாகவும், அதே நிலை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அஸ்ஸாமில் உள்ள தங்கள் குடும்பத்தினர், மிகுந்த கவலையுடன் இருப்பதாகவும், தாங்கள் உடனடியாகத் திரும்பிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பேசிய சென்னை நகர காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி, சென்னை நகரில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார்.ஆனால், சென்னையிலிருந்து இதுவரை எவ்வுளவு பேர் வடகிழக்கு மாநிலங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்றோ, அல்லது சென்னையில் அந்த மாநிலத்தவர்கள் எவ்வளவு பேர் தங்கியிருக்கிறார்கள் என்ற விவரமோ தங்களிடம் இல்லை என்று சென்னை காவல் துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள வடகிழக்கு மாநில மக்கள் கவலையடையத் தேவையில்லை என்றும், அவர்களது பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகம் எப்போதுமே அமைதி நிலவும் மாநிலம் எனவும், இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்து இங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், அஸ்ஸாம் தவிர, சென்னையில் உள்ள மற்ற வடகிழக்கு மாநிலத்தவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, மிசோரம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் பெஞ்சமின் லாலாம்புனியாவிடம் கேட்டபோது, சென்னையில் வெறும் பீதிதான் இருக்கிறதே தவிர, மற்றபடி எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

அதேபோல், சென்னையில் உள்ள நாகாலாந்து மாணவர் சங்கத்தின் தலைவர் வஹ்ரி டுவோவிடம் கருத்துக் கேட்டபோது, திரும்பிச் செல்வோர் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மக்கள் அல்ல என்றும் அவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் லியாலியா என்பவரைத் தாக்கியதாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆனால் அவர் எப்போது தாக்கப்பட்டார், தாக்கியவர்கள் யார் என்ற விவரங்களை காவல்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை. ஆனால், பெங்களூரில் இருந்து வடகிழக்கு மாநில மக்கள் சொந்த மாநிலம் திரும்பவுது தொடர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை வரை 16 ஆயிரம் பேர் திரும்பியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை இரண்டு சிறப்பு ரயில்களில் சுமார் 2 ஆயிரம் பேர் செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 கம்பெனி மத்திய ரிசர்வ் காவல்துறை படையும், கமாண்டோ படையினரும் வெள்ளிக்கிழமை பெங்களூர் சென்றடைந்துள்ளனர். பெங்களூரில் இருந்து யாரும் பீதியடைந்து செல்ல வேண்டாம் எனக் கேட்டுக கொள்ள, அஸ்ஸாம் மாநில போக்குவரத்து அமைச்சர் சந்தன் பிரம்மா, வேளாண் அமைச்சர் நீலமணி பேகர் ஆகிய இருவரும் இன்று மாலை பெங்களூர் வந்து வடகிழக்கு மாநில மக்களைச் சந்தித்துள்ளனர்.

இதற்கிடையில், பெங்களூரைப் போல, ஹைதராபாத் மற்றும் மும்பையிலிருந்தும் வடகிழக்கு மாநில மக்கள் ரயில்களில் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்துக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த, கைத்தொலைபேசி மூலம் ஒட்டுமொத்தமாக அனுபப்பபடும் எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் வசதிகளை அடுத்த 15 நாட்களுக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. ஹைதராபாத், பெங்களூர், மும்பை போன்ற நகரங்களைப் போல சென்னையிலும் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் என வதந்தி பரவுகிறது.

TAGS: