தமிழக சிறப்பு முகாமிலுள்ள கைதிகள் 7 பேர் விடுதலை

தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி செந்தூரன் என்ற கைதி நடத்திய உண்ணாவிரதத்தை தொடர்ந்து, அங்கு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பவை போன்ற சில நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

“விடுதலைப்புலிகள் என்ற போர்வையில், விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னரும், வழக்கு விசாரணை இன்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, முள்வேலி முகாம் தடுப்பை விட மோசமானது” என்று இவர்கள் சார்பில் வாதாடி வந்த வழக்கறிஞர் ஒருவர் கண்டித்துள்ளார்.

விசா பிரச்னை மற்றும் வெளிநாடு செல்ல முயன்றமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சிலரே இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் 60 பேர் வரை தமிழ் நாடு சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், 7 பேர் மாத்திரமே தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக கைது செய்யப்பட்டவர்கள் மாத்திரமே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.