நட்பு ரீதியாக கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு வந்த இலங்கை கால்பந்து குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த இலங்கை கால்பந்து அணியை தமிழகத்துக்கு வர அனுமதித்ததற்காக இந்திய மத்திய அரசாங்கத்தையும் அவர் கண்டித்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் அணியினர் சென்னையில் உள்ள சென்னை பாரத ரிசேர்வ் வங்கியின் அதிகாரையை தொடர்புகொண்டு இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த அணியினர் சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னை சுங்க இலாகாவுடன் ஒரு போட்டியில் விளையாடியும் உள்ளனர்.
இப்படியான போட்டியை அங்கு நடத்த அனுமதி வழங்க நேரு விளையாட்டரங்கு பொறுப்பு அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த போட்டியை அங்கு நடக்க அனுமதித்ததற்காக அந்த அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து, இது குறித்து மேலதிக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
அந்த அதிகாரிக்கு துறைவாரியான நடவடிக்கைக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். அதேவேளை வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியுடன் கால்பந்தாட வந்த இலங்கையின் இரத்தினபுரியைச் சேர்ந்த ஹில்பர்ன் இண்டர்நாஷனல் பள்ளியின் 8 மாணவர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.

























