கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர்புகை வீச்சு

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அணு உலை எதிர்ப்பாளர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தக் கோரி அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடற்கரையை ஒட்டிய பகுதியில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

அந்தப் பகுதியில் போலீஸ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை, போலீசார் அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால், போராட்டக்காரர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினார்கள். அதனால், அங்கிருந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். சிலர் கடலுக்குள் ஓடினார்கள்.

ஆனால், நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டத்தின் முக்கிய மையமான இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில், தமிழக முதல்வர் தலையிட்டு, அணு உலையில் எரிபொருள் நிரப்புவதைத் தடுக்க வேண்டும் என போராட்டக் குழுவின் தலைவர் எஸ்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். தங்கள் அறவழிப் போராட்டம் தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அணு உலையில் எரிபொருள் நிரப்ப, ஏற்கெனவே அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் அணுமின் நிலையப் பணிகளை முன்னெடுக்க ஒப்புதல் வழங்கியது.