சென்னை: ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ் மோகன் (வயது 84).
இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மைலாப்பூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
காலமான லூஸ் மோகன் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவி்துள்ளனர்.
கவலையுடன் கடைசிக் காலத்தை கழித்த லூஸ் மோகன்!
கடந்த ஆண்டு லூஸ் மோகன் சென்னை போலீஸ் ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். தன்னை தனியாக தவிக்க விட்டுச் சென்ற தன் மகன் மீதும், மருமகள் மீதும் குற்றம்சாட்டி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறினார்.
மனுவை கொடுத்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது லூஸ் மோகன், தனக்கே உரிய கலகலப்புடன் கவலைகளை பகிர்ந்து கொண்டவை…
“மக்களை சிரிக்க வைத்த எனது நிலை, இன்று பலரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது. எனக்கு தேவையான அளவு பணம் இருக்கிறது. ஆனால் உதவிக்கு ஆள் இல்லை. எனது மனைவி பச்சையம்மாள் இறந்தபிறகுதான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது. தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். எனது மனைவியால்தான் இந்த சொந்தவீட்டில் வாழும் அளவுக்கு நான் வசதியாக உள்ளேன். எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துவிட்டேன். மகன் கார்த்திக் என்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று நினைத்தேன். அவனுக்கு சொந்தமாக கணினி மையம் வைத்து கொடுத்தேன். அதை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு தமிழ் பத்திரிகை ஒன்றில் வேலை வாங்கி கொடுத்தேன். இப்போது அங்குதான் வேலைபார்க்கிறான்.”
“ஆனால், திருமணத்துக்கு பிறகு எனது மகன் அடியோடு மாறிவிட்டான். மனைவி பேச்சை கேட்டுக் கொண்டு என்னை தனி ஆளாக தவிக்க விட்டு போய்விட்டான். 3 நாட்களாக நான் சாப்பிடவில்லை. சாப்பாடு வாங்கித்தரக் கூட ஆள் இல்லை. போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் டீ கொடுத்தார்கள். அந்த டீயை குடித்தபிறகுதான் எனது பசி அடங்கியுள்ளது.”
“எனது மகள்கள் வீட்டுக்கு போக விருப்பமில்லை. எனது மனைவி வாழ்ந்த வீட்டில் எனது உயிர் போகும்வரை வாழ்வேன். வயதான காலத்தில் பலரது நிலைமை என்னுடைய நிலைமையைப் போலதான் உள்ளது. எனது வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தேன்.”
“எனக்கு ஒரு காது கேட்காது. கண்பார்வை மங்கிவிட்டதால் மற்றவர் துணையில்லாமல் என்னால் நடமாட முடியாது. இருந்தாலும் துணிவே துணை என்ற பொன்மொழியை நினைத்துக்கொண்டு நான் காலத்தை தள்ளுகிறேன். தமிழக மக்களுக்கு குறிப்பாக சினிமா உலகத்தினருக்கு எனது வேண்டுகோள். வாழ்க்கையின் கடைசி காலத்தில் நன்றாக வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான். எனக்காவது வீடு இருக்கிறது, பணம் இருக்கிறது. பணமும், வீடும் இல்லாத வயதானவர்கள் எப்படி வாழ்வார்கள் என்பதுதான் அனைவராலும் யோசிக்கப்பட வேண்டியது ஒன்று,” என்று கூறினார்.
எனினும், இந்த புகார் அளித்த சில நாட்களின் பின்னர் தனது மகன் கார்த்திக் சுமூகமாக சேர்ந்து விட்டதாகவும் தற்போது தன்னை பராமரித்து வருவதாகவும் லூஸ் மோகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.