இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய இறுவட்டுகள், பென்டிரைவ், வரைபடம், ஆதாரங்கள் போன்றவற்றுடன் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை திருச்சி வானூர்தி நிலையத்தில் வைத்து இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் ௭ன்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய பல இறுவட்டுகளை தமீம் அன்சாரி வைத்திருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் வானூர்தி நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து செயற்படும் தீவிரவாத அமைப்புக்களுடன் தனக்குத் தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் குறித்தஇறுவட்டுகளை கொடுக்கவே தான் இலங்கை பயணிக்க முயன்றதாகவும் காவல்துறையினரிடம் சந்தேக நபர் கூறியுள்ளார்.
இதன் மூலம் தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதித்திட்டம் தீட்டி வந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ௭திர்வரும் அக்டோபர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.