கர்நாடகாவில் முற்றுகிறது காவிரி விவகாரம்; எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா !

பெங்களூரூ: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இந்திய பிரதமர் உத்தரவிட்ட விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பலவித போராட்டங்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நடந்த ரயில் மறியல் காரணமாக பெங்களூரூ-மைசூர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்கட்சியான மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும் ஒரு எம்.பி.,யும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இந்த உறுப்பினர்கள் கட்சி தலைவர் குமாரசாமிக்கு தங்களின் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் இன்னும் தமிழகத்திற்கு எதிராக பூதாகரமாக வெடிக்கும் என தெரிகிறது.

நள்ளிரவில் தண்ணீர் திறப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக நள்ளிரவில் கபினி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு, 9,000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டது.

வேறு வழியில்லை என்பதால் இதைச் செய்துள்ளதாக முதல்வர் அம்மாநில ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தண்ணீர் திறந்து விட்டதைக் கண்டித்து மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்; தமிழ்ப் பத்திரிகைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பெங்களூரு – மைசூரு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கர்நாடகாவின், இரண்டு அணைகளிலிருந்தும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட தகவலை அறிந்த விவசாயிகள் சங்கம், காவிரி போராட்டக் குழுவினர், கன்னட அமைப்புகள் கடும் ஆத்திரமடைந்தன. நேற்று அதிகாலையிலிருந்தே, மாண்டியா மாவட்டம் முழுவதும் கடும் பதற்றம் நிலவியது.

TAGS: