மிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ வேண்டும்

-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம், அக்டோபர் 20, 2012.

பிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும்  சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கடந்த திங்கட்கிழமை (15.10.2012) கையெழுத்திட்டன.

மணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகுய்னோ மற்றும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த நிகழ்வில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் கலந்து கொண்டார். இது ஒரு வரலாற்று மைல் கல்லாகும்.

1960 ஆண்டு முதல் தன்னாட்சி உரிமை கோரி தென் பிலிப்பைன்ஸ்சில் போரடிவரும் பங்சா மோரோ மக்களுக்கு இதன் வழி ஒரு தீர்வு பிறந்துள்ளது.

தேசிய சிந்தனை சித்தாந்தத்தின் வழி அரசியல் விடுதலை கோரும் அடக்கப்பட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் வாழ்கின்ற  மக்களுக்கு இன்றுள்ள அரசியல் சூழலில் இந்தத் தீர்வு மனித உரிமை போரட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை கலைவதற்கு 2009-இல் இலங்கை அரசு இராணுவத்தைப் பயன்படுத்தியது. அதுதான் வழிமுறை என்ற அடிப்படையில் அதன் இராஜதந்திரிகள் உலகைப் பவணி வந்தனர். அதே ஆண்டில் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு தாக்கல் மசோதாவை ஆதரித்த நாடுகளில் மலேசியாவும் அடங்கும். ஓராண்டுக்குப் பிறகு வெளியான தகவல்கள் இலங்கை மேற்கொண்ட இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தின. இவை பிரிட்டன் சேனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகின. அத்துடன் ஐக்கிய நாட்டுச் சபையின்  பொதுச் செயலாளர் பன் கீ முன் அமைத்த நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் மேலும் உறுதிப்படுத்தின.

உண்மையானத் தகவல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் நிலைப்பாட்டினை மறு ஆய்வு செய்தன. அவ்வகையில் 2012 இல் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான தீர்மானத்தில் மலேசியா நடுநிலைமை வகித்தது.

கிட்டத்தட்ட 120,000 உயிர்களைப் பறித்த 40 ஆண்டுகளுக்கு மேலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பங்சா மோரோ மக்களின் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றத்திற்கு மலேசியா மாபெரும் பங்காற்றி உள்ளது.

தென் ஆசியாவின் மிக மோசமான மனித உரிமை அத்துமீறல்கள் வழி இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட இராணுவப் போர் அமைதிக்கு வித்திடும் என்பது ஒரு மாயை. அந்தப் போருக்குப்பின் அமைதிக்கான வழிமுறைகளை காணும் பணியில், நான் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம்வுடன் உரையாடுகையில் அவரது கருத்தும் அவ்வகையில்தான் அமைந்திருந்தது.

பங்சா மோரோ மக்களுக்கு மலேசியா ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததை உலகமே பாராட்டியுள்ளது. பல்லின மக்கள் வாழும் மலேசியா இவ்விதச் செயலின்வழி தனது வெளியுறவு கொள்கையில் கொண்டுள்ள மாற்றத்தை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளது. இது தேசிய சிந்தனையின் வழி அரசியல் விடுதலை கோரும் மனித உரிமைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மலேசியா வட்டார அளவில் அமைதி நிலவ மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கையாக இது அமைகிறது.

மலேசியாவின் பங்கு வட்டார அமைதிக்கு மட்டுமில்லாமல் உலக அமைதிக்கும் முக்கியம் என்ற வகையில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பெர்டான அறவாரியம் போர்க் குற்ற ஆணையம் ஒன்றின்வழி செயல்படுவதை இங்கே குறிப்பிட வேண்டும்.

மலேசியா தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குத் தீர்வு காண தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது தேசிய சிந்தனையுடன் அரசியல் விடுதலைக்காக போரடும் மக்களுக்காக மலேசியா தன்னை ஈடுபடுத்தி வருவதை மதிக்கும், வரவேற்கும் மலேசியர்களின் இயல்பான எதிர்ப்பார்ப்பாகும்.

TAGS: