‘நிலாம்’ புயல் கரையைக் கடந்தது; பலத்த காற்றுடன் கன மழை

தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ய காரணமாக இருந்துவந்த ‘நிலாம்’ புயல் மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது.

உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி தொடங்கி இரண்டு மணி நேரம் புயல் கரையைக் கடந்தது. அதேமயம் 90 கிலோமீட்டர் வேகம்கொண்ட பலமான காற்று வீசியது. காற்றுடன் கூடிய மழையும் பெய்தது.

புயலின் காரணமாக ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மகாபலிபுரத்தில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றாலும் அது தொடங்கி இயங்கியே வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் வட கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

புயலின் காரணமாக சேதங்கள் ஏற்படலாம் என்று அஞ்சி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயல்புக்கும் முன்னதாகவே மூடப்பட்டு பணியாளர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தமிழகத்தின் வட கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் புதனன்று பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புகளின் காரணமாக கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்று வியாழனன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறீவித்துள்ளார்.

TAGS: