காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

புதுடெல்லி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் 5.5 டி.எம்.சி.  தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக மாநிலத்திற்கு காவிரி கண்காணிப்புக் குழு  உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நேற்று, இந்தியமத்திய நீர்ப்பாசனத்துறை செயலர் டி.வி. சிங் தலைமையில்.காவிரி  கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு வருகிற நவம்பர் 15 ம் தேதிக்குள் 4 டி.எம்.சி. தண்ணீர்  திறந்து விட வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கவேண்டிய நிலுவையில் உள்ள 1.5 டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து மொத்தம் 5.5 டி.எம்.சி. தண்ணீரை  திறந்துவிடுமாறும் கண்காணிப்புக் குழு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியதில் இருந்து, நிலைமைகள் முற்றிலும் மாறியுள்ளன.

கண்டிப்பான உத்தரவுக்கு பிறகு, 8.85 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கிட வேண்டுமென்று, கடந்த முறை நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது. இப்போதும், இரண்டாம் முறையாக கண்காணிப்புகுழு கர்நாடகாவுக்கு உத்தரவு போட்டுள்ளது.

உச்சநீதிமன்றமும், கண்காணிப்புக்குழுவும் நேர்கோட்டில் செல்வதால் கர்நாடகாவின் பிடிவாதம், முரண்டு ஆகியவை சற்றே குறைந்துள்ளன. கடந்த கூட்டத்தில் வெளிநடப்பு செய்த கர்நாடக அதிகாரிகள், நேற்று அதுபோல எதுவும் செய்யவில்லை; எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்தக்கூட்டம் வருகிற நவம்பர் 15 ம் தேதியன்று மீண்டும் கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: