ஐ.நா. துணைப் பொதுச்செயலாளரிடம் டெசோ தீர்மானம் வழங்கப்பட்டது

நியூயார்க்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து ‘டெசோ’ மாநாட்டு தீர்மானங்களை வழங்கினார்.

சென்னையில் நடைபெற்ற ‘டெசோ’ மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் ஐ.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்.

இலங்கையில் நடைபெற்ற போரினால் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும், கெளரவமான வாழ்க்கை அமைய வேண்டுமென்ற ‘டெசோ’ மாநாட்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மனித உரிமை மீறல் என்பது இலங்கையில் நடைபெற்ற பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று எடுத்துக் கொண்டு ஐ.நா. மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆலோசகர் விஜய நம்பியார் உடன் இருந்தார்.

TAGS: