இராணுவ மேஜரின் எல்லை தாண்டிய காதலுக்கு நீதிமன்றம் ஆசிர்வாதம்

பெங்களூரில் தற்போது பணியாற்றும் இராணுவ மேஜர் விகாஸ் குமார் இலங்கைப் பெண் ஒருவரை தான் காதலிப்பதாகவும் – அப்பெண் இந்தியக் குடியுரிமை பெற விரும்பவில்லை எனவே தன்னை இராணுவத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் மேஜர் விகாசை இராணும் விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்திய இராணுவத்தில் பணிபுரிவோர் வெளிநாட்டவரைத் திருமணம் புரியக் கூடாது என்ற விதி உள்ளது. அப்படி திருமணம் செய்ய விரும்பினால், சம்மந்தப்பட்ட பெண் இந்தியக் குடியுரிமையைப் பெறவேண்டும். அப்படி இல்லையென்றால் சம்மந்தப்பட்டோர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இருக்கிறது.

மேஜர் குமார் தன்னை இராணுவப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி இராணுவத் தலைமையகத்திடம் மனு அளித்தார். அம்மனு நிராகரிக்கப்பட்டவுடன் அவர் வழக்கு தொடர்ந்தார். முதலில் இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை மீண்டும் பரிசிலனை செய்ய வேண்டும் என்று கூறியது. ஆனால் இராணுவத்தில் அதிகாரிகள் பற்றாக் குறை இருப்பது ஒரு காரணமாகக் காட்டப்பட்டு அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார் மேஜர் விகாஸ். இது குறித்து அவரின் வழக்கறிஞர் ஆதித்ய சோந்தி தமிழோசையிடம் கூறுகையில, “இராணுவம் கூறிய தகவல்கள் தவறு என்று வாதாடினோம். எங்கள் வாதத்தை ஒரு நபர் நீதிபதி ஏற்றுக் கொண்டார். எமது கட்சிக்காரர் இராணுவத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து இராணுவம் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த கர்நாடக நீதிமன்றத்தில் முதல் டிவிஷன் பெஞ்ச், முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தியது. இராணுவத்தில் இருந்து அந்த அதிகாரி விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியதுடன் வழக்கு செலவுக்காக 75 ஆயிரம் ரூபாயையும் இராணுவம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது”. என்றார் அவர்

மாற்றம் தேவை

சில ஆண்டுகளுக்கு முன் மேஜர் யேகேஷ் சந்திரா என்ற அதிகாரி ஒரு அமெரிக்கரைத் திருமணம் செய்ய வேண்டிய மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றார். இந்நிலையில் இராணுவம் ஒரு அதிகாரி வெளிநாட்டவரை திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது அவர் இராணுவத்தில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும். ஒரு தனி நபர் தனது வாழ்க்கையை மேற்கொள்ள தடைகள் போடுவதை ஏற்க முடியாது என்கிறார் வழக்கறிஞர் ஆதித்ய சோந்தி.

வெளிநாட்டவரை இராணுவத்தினர் திருமணம் செய்யக் கூடாது என்ற விதியின் பின்னணி குறித்து ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரி ஹரன் கூறுகையில் இந்த விதி காரணமாக எண்பதுகளில் போர்களில் பங்கெடுத்திருந்த ஒரு பிரிகேடியர் பதவியிழந்ததை நினைவுகூர்ந்தார். இது போன்ற விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

TAGS: