பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய 2000 ஏக்கர் நிலம் எங்கே ?

கடந்த 2010 ஆம் ஆண்டு பேரா மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது, அதற்கு முன்பே 2008 இல் 2500 ஏக்கர் நிலத்தைச் சீன பள்ளிகளுக்காக வழங்கியது. இந்த நிலங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம் , இவற்றை விளைச்சல் பூமியாக்கி அதன் வழி வரும் வருமானத்தில் தமிழ் , சீனப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வது என்பதாகும். இந்த அடிப்படையில்தான் சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட அந்த 2,500 ஏக்கர் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு செம்பனை பயிர்கள் நடப்பட்டு இன்னும் 2 ஆண்டுகளில் பலனைக்கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலத்தினைப் பேரா சீனப்பள்ளிகளின் அறவாரியம் பேரா அரசாங்கத்திடம் இருந்து பெற்று  பின்னர் அதனை ஒரு தனியார் தோட்ட மேம்பாட்டாளரிடம் ஒரு உடன்படிக்கையின் வழி  ஒப்படைத்து அந்நிலம் 2010-ல் இருந்து மேம்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த ஒப்பந்தத்தின் படி அந்த தனியார் நிறுவனம், பேரா சீனப்பள்ளிகளின் அறவாரியத்திற்கு முதல் 5 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு ரிம 1 மில்லியன் என்று வழங்கும். அதன் பிறகு இந்தத் தொகை வருடத்திற்கு ரிம 5 மில்லியனாக உயர்த்தப்படும். இதனால் பேரா மாநிலத்திலுள்ள  9 சீன தனியார் பள்ளிகள் பயனடையவிருக்கின்றன. அதே போன்று தமிழ்ப் பள்ளிகளுக்கென்று வழங்கப்பட்ட நிலத்தின் கதி என்னவென்று பார்ப்போம்.

நிலம் போன்ற அசையாச் சொத்துக்களை உடைமையாக்கிக்கொள்ள பள்ளி மேலாளர் வாரியம் என்று ஒன்று ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பது அவசியம் ஆகும். அரசாங்கத்தால் வழங்கப்படும் நிலமானது பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கோ, முன்னாள் மாணவர் சங்கத்திற்கோ அல்லது நேரடியாக பள்ளியின் பெயரிலோ கொடுக்கப்படமாட்டாது. இது நடைமுறைச் சட்டம், இதை யாராலும் மீறவோ மறுக்கவோ மாற்றவோ முடியாது.

அப்படியே சில பள்ளிகளில் மேலாளர் வாரியம் இருந்தாலும் கூட அனைத்து பள்ளிகளின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எந்த பள்ளியின் பெயருக்கு மாற்றுவது என்ற பிரச்னை எழுகின்றது. பேரா மாநிலத்திலுள்ள 134 பள்ளிகளில் ஒரு 20 பள்ளிகளில் மட்டுமே பள்ளி மேலாளர் வாரியம் இருக்கும் பட்சத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த 20 பள்ளிகளுக்கு மட்டும் பகிர்ந்தளிக்கவும் முடியாது. அதனால் அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் யாயாசான் பேராக் எனப்படும் பேரா அரசுக்குச் சொந்தமான பேரா அறவாரியத்தின் கீழ் தஞ்சம் புக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளுக்கென்று மாநில அளவில் ஒரு முறையான  மேலாலர் வாரியம் ஒன்று இல்லாததே இதற்கான காரணமாகும்.

இந்த மாதிரி சூழ்நிலையில்தான் எல்லாத் தமிழ்ப்பள்ளிகளையும் பிரதிநிதிக்கும் வகையில் மாநில அளவில்  தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியச் சங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற அவசியம் உணரப்பட்டது. அப்படி ஒன்று இருந்தால் சீனப்பள்ளிகளுக்கு 2,500 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்ததைப் போன்று தமிழ்ப்பள்ளிகளுக்கான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் ஒப்படைக்க எந்த வித சிக்கல்களும் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலை எதிர்கொண்டு தான் பேரா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியச் சங்கம் ஒன்று 23-02-2012 அன்று மலேசிய சங்க பதிவதிகாரியால் பதிவு செய்யப்பட்டது. இதன் குடையின்  கீழ் பேரா மாநிலத்திலுள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளும் அடங்கும்.

இதன் முக்கிய பணிகளில் சில :

•    தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மாநிலத்திலுள்ள எல்லா தமிழ்ப்பள்ளிகளையும் ஒருங்கிணைப்பது.

•    பள்ளிகளின் நலனுக்காக அவற்றைப் பிரதிநிதித்து மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது,

•    நிலம் வாங்கி அதன் வழி புதிய பள்ளிகள் கட்டுதல், பழைய பள்ளிகளை இடம் மாற்றி புதிய இடத்தில் கட்டுதல் ,பெரிய

நிலமாக இருக்கும் பட்சத்தில் அதில் செம்பனை/ரப்பர் போன்ற மரங்களை நட்டு அதன் வழி கிடைக்கும் வருவாயைக் கொண்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.

இந்த வாரியச் சங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோரும் தங்கள் துறையில் தனித்திறமை பெற்றவர்கள். இவர்கள் எல்லோருமே முறையான வழியில் ஜனநாயக முறைப்படி பேரா மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரிய உறுப்பினர்களின் பிரநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இப்படி முறையாக அமைக்கப்பெற்ற ஒரு  வாரியச் சங்கத்திடம் இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க இப்பொழுது பேரா மாநில அரசு தயக்கம் காட்டுகிறது. இதன் காரணம்தான் என்ன ? இதற்கு இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறும் மஇகாவின் நிலைப்பாடு என்ன ?

பேரா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியச் சங்கம் அந்த மாநில மா.இ. கா.-வின் முக்கிய தலைவர்களிடம்  இந்த விவகாரம் தொட்டு ஒரு சந்திப்பையும் நடத்தியது. அப்பொழுது அந்த தலைவர் இந்த நிலம் குறித்து கவலை கொள்ளவேண்டாம் என்றும் அதனை மேம்படுத்த தனியாக ஒரு குழு அமைத்து அதில்  இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் இயக்கங்களை அங்கம் பெறச்செய்யலாம் என்றும் ; அப்பொழுது இந்த பேரா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியச் சங்கமும் அதில் இணைந்து கொள்ளலாம் என்றும் சொன்னார். இந்தக் குழுவில் பேரா மாநில முன்னாள் இந்நாள் தலைவர்கள் இணைவதற்க்கு முனைப்புக் காட்டுகிறார்கள்.

இதில் வியப்பும் வேதனையும் என்னவென்றால், எந்த ஒரு அமைப்பு  ( பேரா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியச் சங்கம் போன்று ) இல்லாத காரணத்தினால் அந்த 2 ஆயிரம் ஏக்கர் மறுக்கப்பட்டதோ, அதே அமைப்பு  இப்பொழுது இருக்கப்பட்டபோதும் நிலம் மறுக்கப்படுகின்றது. ஒரு வேளை அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த ம.இ.கா. குழு அபகரிக்க எண்ணம் கொண்டுள்ளதோ ?

சீனர்கள் அவர்கள் தாய்மொழிப் பள்ளிகளைக் காப்பதற்காக கட்சி, மதம், பேதங்கள் மறந்து ஒற்றுமையாக ஒரு சீன அறவாரியத்தினிடம் அதனை ஒப்படைக்க முன் வந்த போது ஏன் நம் தமிழர்களுக்கு  மட்டும் இந்த மனப்பாங்கு இன்னும் வரவில்லை ?

இதற்கிடையில் பத்திரிகை வாயிலாக நாம் அறிந்த சில தகவல்களை இங்கு தருகிறோம் படியுங்கள் :

சொ.தியாகராஜன் (10-11-2011- மக்கள் ஓசை)  : பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கிணற்றில் போட்ட கல்லா?

முனைவர் முனியாண்டி நரசிம்மன் ( 12-11-2011 மக்கள் ஓசை ) : பேரா தமிழ்ப்பள்ளிகளுக்கு 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கிடைக்காததற்கு காரணம் அவற்றில் வாரியங்கள் அமைக்கப்படாமையால்தான்.

டத்தோ வீரசிங்கம்  (13-11-2011 தமிழ் நேசன்) : தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் பறிபோகாது ! அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சரி செய்ய விரைவில் டெண்டர்கள் அழைக்கப்படும் . எந்த காலத்திலும் இந்த நிலம் நம் கையை விட்டு போகாது.

டத்தோ வீரசிங்கம் (26-11-2011 தமிழ் நேசன்) : 2 ஆயிரம் ஏக்கர் நிலம் , தமிழ்ப்பள்ளிகளில் அறவாரியம் அமைந்த பின்னர் அவற்றிடம் ஒப்படைக்கப்படும். தற்சமயம் அறவாரியம் இல்லாத காரணத்தினால் மாநில அரசின் துணை நிறுவனமான யாயாசான் பேராவிடம் . அந்நிலத்தை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்ப்பள்ளி அறவாரியம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, தற்சமயம் மேல் நடவடிக்கைக்காக நிறுவன செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது அது விரைவில் பதிவாகிவிடும். இந்த நிலத்தை மேம்படுத்த டெண்டர்கள் அழைக்கப்பட்டுள்ள்து.

•   டத்தோ வீரசிங்கம் (27-11-2011 தமிழ் நேசன்) : 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க இந்திய அறவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நிலத்தை மெம்படுத்த அடிப்படை வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிலத்தை மேம்படுத்தி அதில் பயிர் செய்ய விரைவில் டெண்டர் அழைக்கப்படும்.அந்த நில விவகாரம் குறித்து தேசிய கூட்டுறவுக்கழக நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

• பேரா மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ ஜம்ரி (25-12-11 மலேசிய நண்பன்) : தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலம் விரைவில் மஇகா பரிந்துரைக்கும் அறவாரியம் அல்லது நிர்வாக வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் .

• டாக்டர் முனியாண்டி நரசிம்மன்  (7-4-2012 மலேசிய நண்பன்) : பேரா தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியச்சங்கம் பதிவு பெற்றது. தலைவரக டத்தோ ந.மாரிமுத்து தேர்வு.

• டத்தோ ராஜூ  (8-5-2012 மக்கள் ஓசை): அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய பெரும் பங்காற்றியது ம.இ.கா. மட்டுமே ! நிலத்தை பெற்றுத்தர உரிமையுள்ள ம.இ.கா.விற்கு அதில் தலையிட்டு நிர்வகிக்க உரிமை இல்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயம் ?

• எம் .குலசேகரன் (10-5-12 மக்கள் ஓசை) : 2 ஆயிரம் ஏக்கர் நிலம் ம.இ.கா. உட்பட எந்த அரசியல்வாதிகளிடமும் ஒப்படைக்கக்கூடாது.

கடந்த ஒரு வருடமாக வெளிவந்த இந்த செய்திகளை ஆராய்ந்தால் சில தகவல்கள் தெளிவாகாத் தெரியவரும்.:
1. தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர் வாரியச் சங்கம் முனைவர் முனியாண்டி நரசிம்மன் வாயிலாக அமைக்கப்பட்டுவிட்டது.

2. இரண்டாயிரம் ஏக்கர் தற்காலிகாமாக யாயாசான் பேராவிடம் உள்ளது.

3. முதலில் தமிழ்ப்பள்ளி வாரியம் இருந்தால் அதனிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று சொன்ன டத்தோ வீரசிங்கம் பின்பு அந்த நிலம் இந்திய அறவாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறுகின்றார்.  இந்திய அறவாரியமும் தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர் வாரியமும் ஒன்றுதானா என்று அவர் விளக்கவில்லை.

4. எந்த ஒரு அறவாரியத்திடமும் ஒப்படைக்கப்படாத நிலத்திற்கு எந்த ஒரு அதிகாரத்தின் கீழ் டத்தோ வீரசிங்கம் டெண்டர் அழைத்தார் ?  மேலும் தே.நி,நி.கூ. சங்கத்திடம் அது பற்றி ஏன் விவாதித்தார் என்பதுவும்  கேள்விக்குரியது.

5. அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் ம.இ.கா பரிந்துரைக்கும் நிறுவனத்திடமே ஒப்படைக்கப்படுமென்பதில் மாநில அரசு உறுதியாயிருக்கின்றது.

கடந்த மூன்று வருடங்களாக இந்த நிலத்தை எந்த ஒரு அறவாரியத்திடமும் ஒப்படைக்க உருப்படியான எந்த ஒரு திட்டமும் ம.இ.கா.விடம் இல்லை. ஆரம்பத்தில் தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர் வாரியம் இருந்தால் நிலம் ஒப்படைக்கப்படலாம் என்ற நிலை மாறி இப்பொழுது ஒரு இந்திய வாரியம் இருந்தால் ஒப்படைக்கப்படும் என்ற நிலைக்கு வந்துள்ளது.

டத்தோ ராஜூ சொல்வதை ஆராய்ந்தால் அந்த நிலத்தை ம.இ.கா உரிமை கொண்டாடும் நிலைமை உருவாகும் சாத்தியமும் உள்ளது. மேலும் நமது காதுக்கெட்டிய உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி பேரா மாநில ம.இ.கா வின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் , யாயாசன் பேராக்கின் தலைவருடன் கூட்டாக ஒரு நிறுவனத்தை நிறுவி அதனிடம் இந்த நிலம் ஒப்படைக்கப்படும் என்பதுதான்.

காலத்தைக் கடத்திக்கொண்டும் கேள்விகள் கேட்கப்படும் போது மட்டும் நிலைமையை சமாளிக்க பதில் கொடுத்துக்கொண்டிருந்தால் மட்டும் நமது தமிழ்ப்பள்ளிகள் உய்ய வழி பிறந்துவிடாது .

ஏற்கனவே ம.இ.கா. தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலத்தை முறையற்ற வழியில் கையகப்படுதியுள்ளதை நாடறியும். அக்கட்சி மேற்கொண்ட எந்த ஒரு வாணிப முயற்சியும் வெற்றியடையவில்லை மாறாக மக்களின் பெருங் கோபத்திற்குள்ளானது என்பதும் வெள்ளிடை மலை.

தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம், கோப்டீடீக், மைக்கா ஹோல்டிங்ஸ் தோல்வி தழுவியவற்றில் சில மாதிரிகள்.

இந்த சூழ்நிலையில், ஆக்கபூர்வமான, வெளிப்படையான முறையில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை உள்ள, சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறவாரியத்திடம் இந்த 2 ஆயிரம் ஏக்கரை ஒப்படைப்பதே உத்தமம். அதுவும் இந்த 13 பொதுத் தேர்தல் வரும் வேளையில். ம.இ.கா. இதனைச் செய்தால் அதன் வாக்கு பலமும் அதிகரிக்கும், பேரா மாநிலத்தை வரும் தேர்தலில் பாரிசான் தக்கவைக்கும் வாய்ப்பும் கூடும். இதற்கு எதிர்மறையாக ம.இ.கா. செயல்படுமானால், இதனை எதிர்கட்சிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ம.இ.கா வை கிழி கிழி என்று கிழித்துவிடுவார்கள் என்பது திண்ணம்.

-கோவிந்தசாமி அண்ணாமலை