தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது : நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு மனு

புதுடில்லி: “இந்திய மத்திய அரசு சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது” என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்திய மத்திய அரசு தெரிவித்தது.

தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தற்போது கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழக மக்கள், நாள் ஒன்றுக்கு, 12 மணி நேரத்திற்கு மேலாக மின் வெட்டை எதிர்கொள்கின்றனர். எனவே, டில்லி மாநில அரசு சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ஒரு மாநில அரசு, சரண்டர் செய்யும் மின்சாரத்தை மற்ற மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. அத்துடன், தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கும் வகையில், மின் பரிமாற்ற லைன்களையும் அமைத்து தர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி, அல்தமஸ் கபீர், நீதிபதி செலமேஸ்வர் அடங்கிய,உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மனுவுக்கு, மத்திய அரசு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டதாவது:

டில்லி மாநில அரசு, சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது. ஏனெனில், டில்லி மாநில அரசு சரண்டர் செய்யும் மின்சாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என அசாம், தமிழகம், உத்திர பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தாத்ரா நாகர் ஹவேலி போன்ற மாநிலங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. அதனால், இந்த விஷயத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கும் முன் இந்திய மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களுக்கான, மின் தொகுப்புகள் எல்லாம், ‘ஆல்டர்நேட்டிங் லைன்’ என அழைக்கப்படும் மாற்று மின் பரிமாற்ற லைன்கள் மூலம் புதிய மின் தொகுப்புடன் இணைந்துள்ளன. ஆனால், தென்மண்டல மின் தொகுப்பானது, அதிக மின் அழுத்தத்தை தாங்கக் கூடிய லைன்கள் மூலமாக புதிய மின் தொகுப்புடன் இணைக்கப்படவில்லை.

மத்திய மின் திட்டங்களில் இருந்து தென் மாநிலங்கள் பெறும் மின்சாரத்தில் தமிழகமானது ஆந்திராவுக்கு அடுத்தபடியாக அதிக அளவாக 3,396 மெகா வாட் மின்சாரத்தை பெறுகிறது. ஆந்திரா, 3,535, கர்நாடகா, 1,774, கேரளா, 1,670, பாண்டிச்சேரி, 505 மெகாவாட் மின்சாரத்தையும் பெறுகின்றன. மின் தொகுப்பை பலப்படுத்தவில்லை உபரி மின்சாரத்தை பெறுவதற்கான மின் தொகுப்பை தமிழக அரசு பலப்படுத்தாததே, தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம்.

மேலும், தென்மண்டல மின் தொகுப்பு, கூடுதல் மின்சாரத்தை பெறும் திறன் கொண்டதில்லை. கூடுதல் மின்சாரத்தை பெறும் அளவுக்கு, தமிழக அரசானது, மின் தொகுப்புகளை பலப்படுத்தவில்லை. மேலும், மத்திய அரசிடம் சில மாநிலங்கள் சமர்ப்பிக்கும் கூடுதல் மின்சாரம் எல்லாம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின் தொகுப்புகளின் அடிப்படையில், பகிர்ந்து வழங்கப்படுகின்றன.

எனவே, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு, அம்மாநில அரசே காரணம் என்பதால், அந்த அரச தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு இந்திய மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, மத்திய அரசின் மனுவுக்கு, தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

TAGS: