ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கூறிவிட்டது கர்நாடகம்: ஜெயலலிதா

பெங்களூர்: கர்நாடக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது:

சம்பா சாகுபடிக்காக 14.93 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைப்பு நடந்து,பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன.ஆனால், தற்சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6.3 டி.எம்.சி.அடியில்தான் இருக்கிறது.எங்களிடம் 16 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.ஆனால், இதில் நாங்கள் 5 டி.எம்.சி.யை `டெட் ஸ்டோரேஜ்’ என்று சொல்லப்படும் குறைந்தபட்ச நீர்மட்டத்துக்கு வைத்திருக்க வேண்டும். மேலும், 5 டி.எம்.சி. தண்ணீர் குடிநீர் தேவைகளுக்கு வேண்டும்.

எனவே, தற்போது மீதம் இருப்பது 6.32 டி.எம்.சி. தண்ணீர்தான். இது, நீர்பாசனத்துக்கு அடுத்த 6 நாட்களுக்குத்தான் போதுமானதாக உள்ளது. அதற்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடுவதற்கு தண்ணீர் இல்லை.

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் தண்ணீர் திறந்துவிடவில்லையென்றால், சம்பா பயிர்கள் எல்லாம் கருகி போய்விடும். அது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய அழிவை ஏற்படுத்திவிடும். இப்போது வளர்ந்துள்ள சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு எங்கள் விவசாயிகளுக்கு இன்னும் குறைந்தபட்சம் 65 நாட்களுக்கு விவசாயத்துக்கான தண்ணீர் வழங்கவேண்டும்.

கர்நாடக முதல்வரிடம் இந்த விவரங்கள் அனைத்தையும் விளக்கி முழு நிலைமையையும் விரிவாக விளக்கினேன். அவரிடம் சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு மிகவும் குறைந்தபட்ச தேவையான 30 டி.எம்.சி. தண்ணீரையாவது திறந்துவிடவேண்டும். அதுவும் அடுத்த 15 நாட்களுக்கு வழங்கப்பட வேண்டும். உடனடியாக இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால், எங்களுடைய விவாதத்துக்கு பிறகும், எங்களுடைய வேண்டுகோளுக்குப்பிறகும், கர்நாடக அரசாங்கம் மிக உறுதியாக எங்களால் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டார்கள்.

இதுதான் இன்றைய கூட்டத்தின் விளைவாகும். கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று மிக உறுதியாக மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் கூறியபடிதான், இதுபற்றி விவாதிக்க இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. அடுத்த உச்சநீதிமன்ற விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே,மீண்டும் நாங்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்று,இன்றைய கூட்டத்தின் விளைவுகளை எடுத்துச்செல்வோம்” என்றார்.

TAGS: