கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என தமிழ்நாடு முழுவதும் வதந்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பற்றி நேற்று இரவு திடீரென தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது. தி.மு.க. தொண்டர்கள் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்தவர்களிடம் கேட்டதால் பரபரப்பு அதிகரித்தது. இன்று காலை முதலே இது தொடர்பாக பொதுமக்களிடமும் புரளி பரவியது. குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த வதந்தி அதிக அளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இன்று மதியம் சென்னையிலும் இந்த புரளி பரவியது. நூற்றுக்கணக்கானோர் இது தொடர்பாக பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். என்றாலும் அந்த வதந்தி பற்றி பரபரப்பு நீடித்தது. சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாக சிலர் கூறி வதந்தியை அதிகரித்தனர். இது தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் தனது உடல்நலம் பற்றி வதந்தி பரப்பப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் அறிவாலயம் வந்த அவர் இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

“இன்று காலையிலிருந்து தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தொலைபேசி மூலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களே?” என நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்கு;

“இன்று காலையிலிருந்து சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை பற்றி இந்த வதந்திகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்” என கருணாநிதி தெரிவித்தார்.

TAGS: