தமிழகத்துக்கு 10 ஆயிரம் டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை குறித்து காவிரி கண்காணிப்புக் குழு உடனடியாகக் கூடி முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரு மாநில முதல்வர்களும் பெங்களூரில் கடந்த வாரம் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதையடுத்து, இரு மாநிலங்களும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

கடந்த திங்கட்கிழமை முதல் இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் தலைமையிலான அமர்வின் முன்பு நடைபெற்று வந்தது. இன்று, கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்த வாதங்கள் ஒருபுறம் இருக்க, காய்ந்து வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக எவ்வளவு தண்ணீர் திறந்துவிட முடியும் எனறு கர்நாடக வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், தண்ணீர் தருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கர்நாடகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவின்படி, டிசம்பர் மாதம் 6.1 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். இந்த நிலையில், 10 டிஎம்சி தண்ணீரை ஏன் தரக்கூடாது என்று கேட்ட நீதிபதிகள், அதன்பிறகு காவிரி கண்காணிப்புக் குழு கூடி முடிவெடுக்கட்டும் என்று தெரிவித்தனர். ஆனால், 10 டிஎம்சி என்பது மிக அதிகம் என கர்நாடகத் தரப்பில் ஆட்சேபிக்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்யநாதன், விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டால்தான் மேட்டூர் அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரைத் திறக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், நாளை அல்லது நாளை மறுநாள் காவிரி கண்காணிப்புக் குழு கூடி, அடுத்து எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என முடிவெடுக்கட்டும் என்று உத்தரவிட்டனர்.

கண்காணிப்புக்குழு எடுக்கும் முடிவின் அளவு, நீதிமன்றத்தின் முடிவை விட அதிகமாக இருந்தால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழை ஆகிய இரு தினங்களும் அந்த அளவின் அடிப்படையில் கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவில் எடுக்கப்படும் முடிவை, வரும் திங்கட்கிழமை விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இறுதி உத்தரவை வெளியிடாதது ஏன்?

இதனிடையே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை இதுவரை அரசிதழில் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் ஹரின் ராவல், நடுவர் மன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் அரசிதழில் வெளியிடவில்லை என்று தெரிவித்தார்.

நடுவர் மன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை, அரசிதழில் வெளியிடவும் தடை விதிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது, மத்திய அரசின் இந்தக் கருத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் வெளியிட்டிருந்தால் ஓர் ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கும். எனவே, எப்போது அரசிதழில் வெளியிடப்படும் என்பதை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TAGS: