போராட்டத்தை கைவிடத் தயார் : ‘கூடங்குளம்’ உதயகுமார் அறிவிப்பு

udayakumarநெல்லை: அணு உலை ஆதரவு கொள்கையை முன்வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியை பிடித்துவிட்டால் எங்கள் போராட்டத்தை கைவிடத் தயார் என்று கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்திய கடலோரங்களில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளால் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கடல் சார்ந்த உணவுகள், நிலத்தடி நீர்வளம் உள்ளிட்டவைகள் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் கடலோர மக்களின் வாழ்க்கை ஆதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள் குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் அணு மின் நிலையத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மக்களிடம் விளக்கி கூற வேண்டும். அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் நிலவரங்கள், ஆபத்து காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்கமாக ஒளிவுமறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும். அணு உலை வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவது அவசியமானது.

அணு மின் நிலையத்தை ஆதரித்து வரும் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போது, இந்த பிரச்சனையை முன்னிறுத்தி மக்களை சந்திக்க வேண்டும். அணு உலையை ஆதரிக்கும் இந்த கட்சிகளால் ஆட்சியை பிடிக்க முடியுமா? அணு உலை வேண்டும் என்று தீர்மானித்து இந்த 2 கட்சிகளில் ஒன்றை ஒரு வேளை மக்கள் வெற்றி பெற செய்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால், நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடத்தயாராக இருக்கிறோம்.

ஆனால், தேசிய அளவில் அணு மின் நிலையம் குறித்து விவாதிக்க அவர்கள் தயாரா? மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஊழல்களில் சிக்கி தவிக்கிறது. இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு ஒப்பந்த தீர்மானத்தின் போதும் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததை மக்கள் அறிந்துள்ளனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

TAGS: